கோவையில் 'டெக்ஸ்பேர் 2024' ஜவுளி இயந்திர கண்காட்சி
கோவையில் 'டெக்ஸ்பேர் 2024' ஜவுளி இயந்திர கண்காட்சி
கோவையில் 'டெக்ஸ்பேர் 2024' ஜவுளி இயந்திர கண்காட்சி
ADDED : ஜூன் 20, 2024 10:07 PM

கோவை:'டெக்ஸ்பேர்- 2024' மாபெரும் ஜவுளித்தொழில் இயந்திரங்கள், உதிரி பாகங்கள், துணை கருவிகள் கண்காட்சி, கோவையில் இன்று துவங்குகிறது.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், தென்னிந்திய மில்கள் சங்கம் - சைமா நடத்தும், 'டெக்ஸ்பேர் -- 2024' கண்காட்சி, இன்று துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது. 2001ம் ஆண்டு முதல் சைமா நடத்தி வரும் இந்த கண்காட்சியின், 13வது பதிப்பாகும் இது.
நுால் உற்பத்தி, நெசவு, பின்னலாடை, சாயமேற்றுதல், ஆயத்த ஆடை போன்ற ஜவுளி தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
கோவை, திருப்பூர், ஈரோடு மட்டுமின்றி; தமிழ்நாடு முழுதும் ஜவுளித்தொழில் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்பங்கள், தகவல் பரிமாற்றங்கள், வணிக நிகழ்வுகள் போன்றவற்றை ஊக்கப்படுத்த, 'டெக்ஸ்பேர்' கண்காட்சி உதவி வருகிறது.
ஜவுளித்தொழிலில் இருப்போர், செலவினங்களை குறைத்து, தரமான பொருட்களை உற்பத்தி செய்ய கண்காட்சி வழி வகுக்கிறது. தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழிற்சாலையில் பணியாற்றுவோர், தொழில் நிறுவனத்தினர், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் இதில் பங்கேற்று, புதிய பொருட்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்கின்றன.
நான்கு நாட்கள் நடக்கும் கண்காட்சியில், ஒரு லட்சம் பார்வையாளர்கள், வணிகர்கள் பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.