ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு தொடர்ந்து அதிகரிப்பு
ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு தொடர்ந்து அதிகரிப்பு
ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு தொடர்ந்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 18, 2024 01:40 AM

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் முதன்மையான ஐந்து மாநிலங்களில், தமிழகம் மட்டுமே கடந்த நிதியாண்டில் அதன் பங்களிப்பை அதிகரித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்தாலும், அவற்றின் பங்களிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
வர்த்தகத்துறை அமைச்சக தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 64.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதில், சரக்கு ஏற்றுமதி யின் மதிப்பு, கிட்டத்தட்ட 36.27 லட்சம் கோடி ரூபாய். சேவைகள் துறை ஏற்றுமதியின் மதிப்பு 28.23 லட்சம் கோடி ரூபாய்.
இந்நிலையில், கடந்த நிதியாண்டுக்கான நாட்டின் சரக்கு ஏற்றுமதியில், குஜராத் மாநிலத்தின் பங்கு 30.70 சதவீதமாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் இருந்த 32.70 சதவீதத்தை விட குறைவாகும்.
இதேபோல, மகாராஷ்டிர மாநிலத்தின் பங்கு, கடந்த 2022 - 23ம் நிதியாண்டிலிருந்த 16.20 சதவீதத்திலிருந்து, கடந்த நிதியாண்டில் 15.40 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளாக, இம்மாநிலத்தின் பங்களிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா, உத்தரபிரதேச மாநிலங்களின் பங்களிப்பும், கடந்த நிதியாண்டில் குறைந்தது.
மாறாக, முதன்மையான ஐந்து மாநிலங்களில், தமிழகம் மட்டுமே கடந்த நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், அதன் பங்களிப்பை அதிகரித்துள்ளது. தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளாக தமிழகத்தின் பங்களிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் 9.10 சதவீதமாக இருந்த தமிழகத்தின் பங்களிப்பு, கடந்த நிதியாண்டில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், உலகளவில் வர்த்தகம் மந்தமாக இருந்த நிலையில், தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதற்கு மாநிலத்தின் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணுவியல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்ததே முக்கிய காரணமாகும்.
கடந்த நிதியாண்டில், தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மின்னணுவியல் பொருட்களின் மதிப்பு 77 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 80,000 கோடி ரூபாயாக இருந்தது.
இதுமட்டுமல்லாமல், சேவைகள் துறை ஏற்றுமதியிலும் தமிழகம் முதல் மூன்று இடத்தில் இருப்பதாக, ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர். கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகியவை மற்ற இரண்டு மாநிலங்களாகும்.
முதன்மையான 5 மாநிலங்களில், தமிழகம் மட்டுமே பங்களிப்பை அதிகரித்து வருகிறது