உலகின் உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்கும்: அமைச்சர் ராஜா
உலகின் உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்கும்: அமைச்சர் ராஜா
உலகின் உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்கும்: அமைச்சர் ராஜா
ADDED : ஜூன் 25, 2024 10:26 PM

சென்னை: ''நாட்டின் எலக்ட்ரானிக் சிட்டியாக காஞ்சிபுரமும், சென்னையும் திகழ்கின்றன. உலகின் உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்கும்,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 'கார்னிங்' நிறுவனம், நம் நாட்டின் 'ஆப்டிமஸ் இன்ப்ராகாமின்' கூட்டு நிறுவனமான, 'பாரத் இன்னோவேடிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் - பிக் டெக்' நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது.
அங்கு, 'ஸ்மார்ட் போன், லேப்டாப்' சாதனங்களுக்கான உயர்தர கண்ணாடி பாகங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அதில், அமைச்சர் ராஜா, தொழில் துறை செயலர் அருண் ராய் மற்றும் கார்னிங், ஆப்டிமஸ் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
இதில், கார்னிங் நிறுவனத்தின் துணை தலைவர் டேவிட் வெலாஸ்குவெஸ் பேசும்போது, ''கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவின் தொழில்நுட்பத்தில் கார்னிங் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆப்டிமஸ் உடனான இந்த கூட்டு திட்டம் வாயிலாக, புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தும்,'' என்றார்.
ஆப்டிமஸ் நிறுவன செயல் தலைவர் அசோக் குப்தா பேசும்போது, ''அரசின் 'மேக் இன் இந்தியா' முயற்சியின் கீழ் ஆலை அமைக்கப்படுகிறது; இங்கு, அதிக தரத்தில் மொபைல் கண்ணாடி தயாரிக்கப்படும்,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜா பேசியதாவது:
இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் உற்பத்தியில், 40 சதவீதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் எலக்ட்ரானிக் சிட்டியாக சென்னையும், காஞ்சிபுரமும் தான் திகழ்கின்றன.
கார்னிங் மற்றும் ஆப்டிமஸ் கூட்டு நிறுவனமான பிக் டெக், தமிழகத்தில் தொழிற்சாலை அமைப்பதை வரவேற்கிறோம். இது, தமிழகத்தில் சிறந்த உள்கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள், தொழில் துவங்க சாதகமான சூழல் நிலவுவதை எடுத்துக் காட்டுகிறது.
புதிய ஆலையால், அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். உலகின் உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்கும்.
தமிழகத்தை, புதுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் மையமாக மாற்ற அரசு உறுதி எடுத்துள்ளது. பல வேலைவாய்ப்பை உருவாக்குவதன் வாயிலாக, தமிழகம் மற்றும் இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.