டிட்கோவின் 'பின்டெக் சிட்டி'யில் இரு நிறுவனங்களுக்கு இடம்
டிட்கோவின் 'பின்டெக் சிட்டி'யில் இரு நிறுவனங்களுக்கு இடம்
டிட்கோவின் 'பின்டெக் சிட்டி'யில் இரு நிறுவனங்களுக்கு இடம்
ADDED : ஜூலை 11, 2024 01:12 AM

சென்னை:சென்னை நந்தம்பாக்கத்தில், 'டிட்கோ' நிறுவனம், உலகத் தரத்தில் நிதிநுட்ப நகரம் ஒன்றை அமைத்து வருகிறது. முதல் கட்டமாக, அங்குள்ள இரு மனைகள், இரு நிதி சேவை நிறுவனங்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
இந்த 'பின்டெக் சிட்டி' எனப்படும் நிதிநுட்ப நகரம் மொத்தம், 110 ஏக்கரை உள்ளடக்கியது. முதல் கட்டமாக, 83 கோடி ரூபாய் செலவில், 56 ஏக்கரில், உலகத்தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
நிதிநுட்பத்துறை
மேலும், அலுவலக கட்டடங்கள், நட்சத்திர விடுதி, குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை உள்ளடக்கியதாக இது இருக்கும்.
இந்த நகரில், வங்கிச்சேவை, வங்கி சாரா நிதிச்சேவை, நிதிச்சந்தை செயல்பாடு போன்ற, நிதித்துறை மற்றும் நிதிநுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, பொது கட்டமைப்பு வசதியுடன் நிலம் வழங்கப்படும்.
முதல் கட்டமாக, 36 ஏக்கர் தொழில்மனைகள், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது.
தற்போது, நந்தம்பாக்கத்தில் நிலத்தின் சந்தை மதிப்பு மிகவும் அதிகம். எனவே, சோதனை முயற்சியாக, தலா, 1.50 ஏக்கர் உடைய இரு மனைகளை, 'பார்வார்டு ஆக் ஷன்' எனப்படும் ஏல முறை, 'டெண்டர்' வாயிலாக விற்க, இந்தாண்டு ஜனவரியில் கோரப்பட்டது.
ஒரு ஏக்கருக்கு, 35 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதை விட, அதிக விலை கோரும் நிறுவனத்திற்கு மனை வழங்கப்பட இருந்தது. டிட்கோ எதிர்பார்த்தது போல், நிர்ணயம் செய்ததை விட அதிகமாக, இரு நிறுவனங்கள் விலை புள்ளி வழங்கியுள்ளன.
நடவடிக்கை
இதையடுத்து, 'முத்துாட் பைனான்ஸ், ஆக்சிஸ் ரியல் எஸ்டேட்' ஆகிய நிறுவனங்களுக்கு, மனை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. ஏக்கருக்கு சராசரியாக, 45 கோடி ரூபாய் விலை கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிதிநுட்ப நகரத்தில், மனை விற்பனை வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது. இதேபோல், மற்ற மனைகளும் விரைவில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.