ADDED : ஜூலை 11, 2024 01:16 AM

புதுடில்லி,:இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக, இந்தியா - தைவான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், கடந்த திங்கள் கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அமைச்சகம் மேலும் தெரிவித்திருப்பதாவது: தேயிலை மற்றும் மருத்துவ தாவரங்கள் உள்ளிட்ட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களின் வர்த்தகத்தை எளிதாக்க, இந்தியா - தைவான் இடையே பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த திங்கள் கிழமை முதலே நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, ஏற்றுமதிக்கான இரட்டை சான்றிதழ் பெறுவது தவிர்க்கப்பட்டு, எளிதாக்கப்பட்டுள்ளது.
இந்த பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம், அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவு, பச்சை - கருப்பு மற்றும் மூலிகை தேயிலை, மருத்துவ தாவரங்கள் போன்ற முக்கிய இந்திய இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களை, தைவானுக்கு ஏற்றுமதி செய்ய வழி செய்கிறது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.