சிறு நிறுவனங்களை கைவிடும் பொதுத்துறை நிறுவனங்கள்
சிறு நிறுவனங்களை கைவிடும் பொதுத்துறை நிறுவனங்கள்
சிறு நிறுவனங்களை கைவிடும் பொதுத்துறை நிறுவனங்கள்
ADDED : ஜூன் 10, 2024 11:26 PM
சென்னை : சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 25 சதவீத உபகரணங்களை, மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்வதில்லை. இதனால் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, கண்காணிப்பு குழுவை நியமிக்குமாறு அரசுக்கு, தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
உள்நாட்டு சிறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க, மத்திய அரசு, பொது கொள்முதல் கொள்கையை 2018ல் வெளியிட்டது.
அதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள், தங்களின் ஆண்டு மொத்த கொள்முதலில், 25 சதவீதத்தை, சிறு, குறு நிறுவனங்களிடம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
அதில், 3 சதவீதம் பெண் தொழில் முனைவோரிடம் இருந்து வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பல பொதுத்துறை நிறுவனங்கள், இதை அலட்சியம் செய்வதாக புகார்கள் எழுந்துஉள்ளன.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மோகன் கூறியதாவது:
கட்டாய கொள்முதல் இருந்தும், பொதுத்துறை நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதில்லை.
பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது தங்களுக்கு தேவைப்படுவதை முழுமையாக தயாரிக்கப்பட்ட பொருளாகவே வாங்குகின்றன. இதனால் உதிரி பாகங்களை தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.
பொது நிறுவனங்களின் பொருட்கள் கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்புகளில், பெரிய நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் நிபந்தனைகளை விதிக்கின்றன. இதனால், அந்த டெண்டரில் சிறு நிறுவனங்களால் பங்கேற்க முடிவதில்லை.
எனவே, பெரிய நிறுவனங்கள் கட்டாய பொது கொள்முதல் திட்டத்தின் கீழ், சிறு நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதை உறுதி செய்யவும், முறையிடவும் கண்கணாணிப்பு குழுவை அரசு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்டாய கொள்முதல் திட்டத்தின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள், ஆண்டு கொள்முதலில், 25 சதவீதத்தை சிறு நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும்