Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/குடும்பங்களின் நுகர்வு செலவு குறைந்து வரும் சமத்துவமின்மை

குடும்பங்களின் நுகர்வு செலவு குறைந்து வரும் சமத்துவமின்மை

குடும்பங்களின் நுகர்வு செலவு குறைந்து வரும் சமத்துவமின்மை

குடும்பங்களின் நுகர்வு செலவு குறைந்து வரும் சமத்துவமின்மை

ADDED : ஜூன் 09, 2024 02:52 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில், சமத்துவமின்மை குறைந்துள்ளதாக, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புறங்களின் அடிப்படையில், கேரளா பணக்கார மாநிலமாகவும்; நகர்ப்புறங்களின் அடிப்படையில் தெலுங்கானா பணக்கார மாநிலமாகவும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.எஸ்.ஓ., எனும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், நாட்டிலுள்ள குடும்பங்களின் நுகர்வு செலவு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

இறுதியாக கடந்த 2011 - 12ம் நிதியாண்டு எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு, 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் 2022 - 23ம் நிதியாண்டில் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017- 18ம் நிதியாண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பே, குடும்பங்களின் சராசரி செலவினம் குறைந்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் கசிந்ததால், அரசு முடிவுகளை வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது 2022-23 நிதியாண்டுக்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2011 - 12 மற்றும் 2022 - 23ம் நிதியாண்டுக்கு இடையே, நாட்டின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் சமத்துவமின்மை குறைந்துள்ளது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில், முதல் ஐந்து சதவீத பணக்கார குடும்பங்களின் சராசரி மாத செலவினம், இதற்கு முந்தைய கணக்கெடுப்புகளைக் காட்டிலும் சற்றே குறைந்துள்ளது.

எனினும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நகர்ப்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் சமத்துவமின்மையின் சரிவு சற்று குறைவாகவே உள்ளது.

செலவினத்தைப் பொறுத்தவரை, பொருளாதார நிலையில், முதல் 10 சதவீதத்தில் உள்ள குடும்பங்களின் பங்கு சரிந்தும், இடையில் உள்ள 50 சதவீத குடும்பங்களின் பங்கு அதிகரித்தும் உள்ளது.

கிராமப்புறங்களின் அடிப்படையில், நாட்டின் பணக்கார மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள், மாதம் ஒன்றுக்கு, சராசரியாக 5,924 ரூபாய் செலவழிக்கின்றன.

நகர்ப்புறங்களின் அடிப்படையில், நாட்டின் பணக்கார மாநிலமாக தெலுங்கானா உள்ளது. இம்மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள குடும்பங்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 8,158 ரூபாய் செலவழிக்கின்றன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நகர்ப்புறங்களை காட்டிலும், கிராமப்புறங்களில் சமத்துவமின்மையின் சரிவு சற்று குறைவாகவே உள்ளது

 கேரளாவின் கிராமப்புற குடும்பங்கள், மாதம் ஒன்றுக்கு, சராசரியாக 5,924 ரூபாய் செலவழிக்கின்றன

 தெலுங்கானாவின் நகர்ப்புற குடும்பங்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 8,158 ரூபாய் செலவழிக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us