சிறு நிறுவனங்களுக்கு குறைந்த வாடகையில் 'துல்லிய பொறியியல்' பொது சேவை மையம்
சிறு நிறுவனங்களுக்கு குறைந்த வாடகையில் 'துல்லிய பொறியியல்' பொது சேவை மையம்
சிறு நிறுவனங்களுக்கு குறைந்த வாடகையில் 'துல்லிய பொறியியல்' பொது சேவை மையம்
ADDED : ஜூன் 20, 2024 10:21 PM

சென்னை:சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் தங்கள் உற்பத்தியை மேம்படுத்த உதவும் வகையில் பொது வசதி மையம் ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.
வாகன பாகங்கள், விண்வெளி சாதனங்கள் போன்றவற்றின் நவீன தயாரிப்புக்கு தேவைப்படும் துல்லிய பொறியியல் பொருட்களின் வடிவமைப்பு, '3டி பிரிண்டட்' தொழில்நுட்ப வசதி, ஆய்வகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொது வசதி மையத்தை தமிழக அரசு, காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கத்தில் அமைத்துள்ளது.
அதிகம் செலவு
இந்த மையம் விரைவில் சிறு நிறுவனங்களுக்கு, குறைந்த வாடகையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும், 'பிரிசிஷன் இன்ஜினியரிங் காம்போனென்ட்ஸ்'அதாவது, துல்லிய பொறியியல் பாகங்களை உருவாக்கும் சிறு நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
இந்நிறுவனங்கள், தங்களின் தயாரிப்பு வடிவமைப்பு, சோதனை போன்றவற்றுக்கு, பெரிய தனியார் நிறுவனங்களின் உதவியை நாடவேண்டிய நிலையில் உள்ளன. இதற்காக, இவை அதிகம் செலவிட வேண்டியுள்ளது.
எனவே, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை, காஞ்சிபுரம் திருமுடிவாக்கத்தில், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தொழிற்பேட்டையில், துல்லிய பொறியியல் உற்பத்தி பெருங்குழுமம் எனப்படும், பொது வசதி மையம் ஒன்றை அமைக்கும் பணியை, 2023 நவம்பரில் துவக்கியது.
அங்கு, பொருட்களை வடிவமைக்கும் கணினி மென்பொருள், அந்த பொருளை சோதனை ரீதியாக உற்பத்தி செய்யும் கூடம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருமுடிவாக்கம், துல்லிய பொறியியல் பொது சேவை மையத்துக்கான திட்ட செலவு, 100 கோடி ரூபாய்.
முதற்கட்டமாக, 47 கோடி ரூபாய் செலவில், கணினி மென்பொருள் வசதி, '3டி பிரிண்டட்' தொழிநுட்பம், ஆய்வகம், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
விரைவில் இந்த மையத்தை குறைந்த வாடகைக்குப் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது.
இரண்டாம் கட்டமாக, பொது உற்பத்திக்கூடம் அமைக்கப்பட உள்ளது. அங்கு, தங்களின் பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளலாம். இந்த பொது சேவை மையத்தின் வாயிலாக, ஒருவர், அதிக முதலீடு செய்து தொழில் துவங்குவதற்கு முன், மிகக் குறைந்த செலவில் தன் தயாரிப்பை வடிவமைக்கலாம்.
தயக்கம் ஏற்படாது
அதை சந்தையில் விற்ற பின், தேவையை பொறுத்து, தொழிலை துவக்கலாம். இதனால், தொழில் துவங்கிய பின் லாபம் கிடைக்குமா, நஷ்டம் ஏற்படுமா என்ற தயக்கம் ஏற்படாது.
திருமுடிவாக்கம் துல்லிய பொறியியல் வசதி மையம், அரசு மற்றும் சிறு, குறு தொழில்முனைவோர் இணைந்து உருவாக்கிய சிறப்பு முகமை வாயிலாக அமைக்கப்பட்டுள்ளது.
அரசின் பங்கு, 70 சதவீதம்; மீதி, தொழில்முனைவோர்கள் உடையது.
இவ்வாறு அவர் கூறினார்.