பரந்துார் விமான நிலைய திட்டம்: சுற்றுச்சூழல் குழுவினர் பரிசீலனை
பரந்துார் விமான நிலைய திட்டம்: சுற்றுச்சூழல் குழுவினர் பரிசீலனை
பரந்துார் விமான நிலைய திட்டம்: சுற்றுச்சூழல் குழுவினர் பரிசீலனை
ADDED : ஜூன் 20, 2024 01:29 AM

சென்னை:காஞ்சிபுரம், பரந்துாரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, 'டிட்கோ' நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிபுணர் குழு வரும், 28ம் தேதி பரிசீலிக்கிறது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கூடுதல் பயணியரைக் கையாள, சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, பரந்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், 5,300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தனியார் வசம் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
பரந்துார் விமான நிலைய திட்டப் பணிகளை மேற்கொள்ளும் முகமையாக தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது.
நிலம் எடுக்கும் இடங்களில், 36,600 மரங்கள் வெட்ட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. 'டிட்கோ' நிறுவனம், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த விண்ணப்பத்தை, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு, டில்லியில் வரும், 28ம் தேதி பரிசீலனை செய்கிறது.
அன்று, அக்குழுவிடம், தமிழக தொழில் துறை அதிகாரிகள், திட்டத்தின் அவசியம், திட்ட விபரம் தொடர்பாக விரிவாக விளக்கிக் கூறுவர். பின், விண்ணப்பம் மீதான முடிவை நிபுணர் குழு எடுக்கும். சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்ததும், அடுத்தகட்ட பணி விரைந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.