புத்தொழில் நிறுவனத்தில் எம்.எஸ்.,தோனி முதலீடு
புத்தொழில் நிறுவனத்தில் எம்.எஸ்.,தோனி முதலீடு
புத்தொழில் நிறுவனத்தில் எம்.எஸ்.,தோனி முதலீடு
ADDED : ஜூலை 17, 2024 11:08 AM

புதுடில்லி : மின்சார வாகனங்களில் பயண சேவையை வழங்கி வரும் 'புளூஸ்மார்ட்' நிறுவனத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி முதலீடு செய்துள்ளார். இது, வாகனத் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களில், தோனியின் மூன்றாவது முதலீடாகும்.
கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்ட புளூஸ்மார்ட் நிறுவனம், ஹரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிறுவனம், சமீபத்தில் 200 கோடி ரூபாய் நிதி திரட்டியதாக தெரிவித்துள்ளது. முதலீடு செய்த குறிப்பிடத்தக்க சில முதலீட்டாளர்களின் பெயரை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, எம்.எஸ்., தோனி, 'ரினீவ் பவர்' தலைமை செயல் அதிகாரி சுமந்த் சின்ஹா மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான 'ரெஸ்பான்ஸ்எபிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்' ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து தோனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகர்ப்புற போக்குவரத்தின் போக்கை மாற்றி அமைப்பதற்கான புளூஸ்மார்ட் நிறுவனத்தின் புதுமையான முயற்சிகளை ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
புளூஸ்மார்ட், இந்தியாவில் கார்பன் அளவை குறைக்கும் மின்சார போக்குவரத்தில் தன்னை ஒரு முன்னோடியாக சந்தைப்படுத்துகிறது. 70 மின்சார வாகனங்களுடன் துவங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது 7,500 மின்சார வாகனங்களுடன் பயண சேவை வழங்கி வருகிறது.
தற்போது இதன் பயண சேவைகள், டில்லி தலைநகர் பகுதியிலும், பெங்களூரிலும் வழங்கப்பட்டு வருகின்றன. நிறுவனத்துக்கு மொத்தம் 35 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் உள்ளன.