கட்டுக்குள் வந்தது பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.61 சதவீதம்
கட்டுக்குள் வந்தது பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.61 சதவீதம்
கட்டுக்குள் வந்தது பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.61 சதவீதம்
ADDED : மார் 13, 2025 01:02 AM

புதுடில்லி:நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான நாட்டின் சில்லரை விலை பணவீக்க விகிதம், கடந்த மாதம் 3.61 சதவீதமாக குறைந்துள்ளதாக, மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பின், பணவீக்கம் முதல்முறையாக, ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கான 4 சதவீதத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை குறைந்ததே, கடந்த மாதம் பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு பிப்ரவரியில் காய்கறிகள் விலை 1.07 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஜனவரியில் 5.97 சதவீதமாக இருந்த உணவு பிரிவு பணவீக்கம், கடந்த மாதம் 3.75 சதவீதமாக குறைந்துஉள்ளது.
கடந்த 2023 மே மாதத்துக்கு பின், இதுவே குறைந்தபட்சமாகும். மாதாந்திர அடிப்படையில் தானியங்கள், பருப்பு வகைகளிலும் பணவீக்கம் சற்றே குறைந்துள்ளது. இது தவிர முட்டை, இறைச்சி, பால் பொருட்கள் ஆகியவற்றிலும் பணவீக்கம் குறைந்துஇருந்தது.
சில்லரை விலை பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்க விகிதம், முன்பிருந்த 4.31 சதவீதத்திலிருந்து 4.26 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.