ADDED : ஜூன் 18, 2024 04:05 AM

திருப்பூர்: நம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் உயர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில் 9.84 சதவீதம் அளவுக்கு வர்த்தகம் அதிகரித்துள்ளது.
சீனா, வங்கதேசம், வியட்நாமுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் இருந்து வளர்ந்த நாடுகள், அதிகளவில் ஆடைகளை இறக்குமதி செய்கின்றன.
கடந்த பிப்., மாதத்தில் இருந்து ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலர் மதிப்பு அடிப்படையில், 9.84 சதவீதம் அளவுக்கு வர்த்தகம் உயர்ந்துஉள்ளது.
அதாவது, கடந்தாண்டு மே மாதம், 10,341 கோடி ரூபாயாக இருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த மாதம், 11,342 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அனைத்து ஜவுளி ஏற்றுமதி வர்த்தக முகமைகள் கூட்டமைப்பான 'அபாட்' தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தநிலை மறைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால், கடந்த பிப்., மாதத்தில் இருந்தே ஆர்டர் அதிகரித்தது. தற்போது குளிர்கால ஆர்டர்களும் வழக்கம் போல வந்து கொண்டிருக்கின்றன.
இனிவரும் மாதங்களில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேலும் உயரும் என்று நம்புகிறோம். செங்கடலில், கடல் கொள்ளையர் பிரச்னையால், கப்பல்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன.
இதனால், சரக்கு சென்றடைய கூடுதல் தாமதம் ஏற்படுகிறது. இப்பிரச்னையும் முடிவுக்கு வந்தால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் சீரான வளர்ச்சி பாதையில் பயணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கடலில் கடல் கொள்ளையர் பிரச்னை முடிவுக்கு வந்தால் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும்