ஆடைகள் துறைக்கு பி.எல்.ஐ., விரிவுபடுத்தும் முடிவில் அரசு
ஆடைகள் துறைக்கு பி.எல்.ஐ., விரிவுபடுத்தும் முடிவில் அரசு
ஆடைகள் துறைக்கு பி.எல்.ஐ., விரிவுபடுத்தும் முடிவில் அரசு
ADDED : ஜூன் 25, 2024 10:22 PM
புதுடில்லி : ஜவுளித்துறைக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தை, ஆடைகளுக்கான துறைக்கும் விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக, ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டு, ஜவுளி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு 10,683 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இத்துறையில், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் பெருமளவு இருப்பதால், வரும் ஆண்டுகளில் 4.15 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதியை, தொழில்துறையினர் இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். தற்போது இந்திய ஜவுளி துறையின் சந்தை அளவு கிட்டத்தட்ட 13.69 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதை, 29.05 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலும் ஊக்குவிப்பு திட்டத்தை ஆடைகள் துறைக்கும் விரிவுபடுத்த அரசு பரிசீலித்து வருகிறது.
இந்திய தொழில்துறையின் மிகப்பெரிய போட்டியாளராக வங்கதேசமும், சீனாவும் உள்ளன. போட்டிகளை சமாளிக்கும் வகையில் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.
பசுமை ஜவுளி மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், உலகளாவிய பிராண்டுகளின் சப்ளையர்களாக மாறாமல், தொழில்துறையினர் தங்கள் சொந்த பிராண்டுகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.