ரயில்வே சரக்கு முனையம் அரக்கோணத்தில் பணி துவக்கம்
ரயில்வே சரக்கு முனையம் அரக்கோணத்தில் பணி துவக்கம்
ரயில்வே சரக்கு முனையம் அரக்கோணத்தில் பணி துவக்கம்
ADDED : ஜூன் 29, 2024 12:42 AM

சென்னை:அரக்கோணத்தில், 50 கோடி ரூபாயில், புதிய ரயில்வே சரக்கு முனையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத்தின் கீழ், ரயில்வேயில் தனியார் பங்களிப்போடு, புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சரக்குகளை கையாளும் வகையில் ரயில்வே ஷெட்டுகள் அமைப்பது, புதிய சரக்கு முனையம் அமைப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே, ரயில்வே மற்றும் தனியார் பங்களிப்போடு, 50 கோடி ரூபாயில், புதிய சரக்கு ரயில் முனையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, 'ஜே.எஸ்.டபிள்யு., இன்ப்ராஸ்ட்ரக்சர்' நிறுவனத்துடன், ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள 1 லட்சம் சதுர மீட்டர் ரயில்வே நிலப்பரப்பில், இந்த சரக்கு முனையம் அமைய உள்ளது.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
அரக்கோணத்தில் புதிய சரக்கு முனையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இரண்டு முழுநீள சரக்கு ரயில்கள் நிற்பதற்கான வசதியுடன், சரக்குகளை கையாளுவதற்கு போதுமான தளங்கள், நெடுஞ்சாலைகள் இணைப்பு சாலை வசதிகள், அலுவலக கட்டடங்கள் உள்ளிட்ட வசதிகளோடு இது அமைக்கப்படும்.
அடுத்த மூன்று மாதங்களில் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இந்த முனையத்தில் ஆண்டுதோறும் 10 லட்சம் டன் சரக்குகள் கையாள முடியும். ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.