Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ராணுவ கருவிகளை பரிசோதிக்கும் மையங்கள் தமிழகத்தில் அமைக்கிறது மத்திய அரசு

ராணுவ கருவிகளை பரிசோதிக்கும் மையங்கள் தமிழகத்தில் அமைக்கிறது மத்திய அரசு

ராணுவ கருவிகளை பரிசோதிக்கும் மையங்கள் தமிழகத்தில் அமைக்கிறது மத்திய அரசு

ராணுவ கருவிகளை பரிசோதிக்கும் மையங்கள் தமிழகத்தில் அமைக்கிறது மத்திய அரசு

ADDED : ஜூலை 04, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
சென்னை:தமிழகத்தில் ஆளில்லா விமானம், மின்னணு ஆயுதங்கள் போன்றவற்றின் தரத்தை பரிசோதிக்கும் அதிநவீன பொது பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி கழகம் இடையில், டில்லி யில் நேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகம், உ.பி., மாநிலங்களில் பாதுகாப்பு தொழில் பெருவழித்தட திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தவிர தமிழக அரசும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில், அடுத்த 10 ஆண்டுகளில், 75,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்


தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், ராணுவம், விமானம், கடற்படை என, பாதுகாப்பு துறைக்கான சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிலில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், சாதனங்களின் தரத்தை சோதித்து, சர்வதேச தரத்தில் சான்று அளிக்கக்கூடிய சோதனை மையங்கள் வெகு குறைவாகவே உள்ளன. இதற்காக, அதிக தொகையை நிறுவனங்கள் செலவிடுகின்றன.

எனவே, டிட்கோ நிறுவனம், பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, ஆளில்லா விமான தொழில்களுக்கான பொது சோதனை மையம், மின்னணு போர் முறைக்கான மையம், 'எலக்ட்ரோ ஆப்டிகல்ஸ்' பொது சோதனை மையம் என, மூன்று மையங்களை அமைக்க உள்ளது.

இவை அனைத்தும் காஞ்சிபுரம், வல்லம் வடகால் பகுதியில் அமைய உள்ளன. இந்த மையங்களுக்கான திட்டச் செலவில், பாதுகாப்பு அமைச்சகம் 75 சதவீதத்தை ஏற்கும்.

மீதியை, நிறுவனங்கள் செலவிட வேண்டும். இது தொடர்பாக, பாதுகாப்பு துறை செயலர் கிரிதர் அரமானே முன்னிலையில், பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் டிட்கோ அதிகாரிகள் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரேடார், ஜாமர்


எலக்ட்ரோ ஆப்டிகல்ஸ் கீழ், மின் ஒளியியல் கருவி, இரவில் பார்க்கும் கருவி போன்றவையும்; எலக்ட்ரானிக்ஸ் போர் முறை சாதனங்களான ரேடார், ஜாமர் உள்ளிட்ட கருவிகளும் இடம்பெறுகின்றன.

இவை குறித்து, டிட்கோ மேலாண் இயக்குனர் சந்தீப் நந்துாரி கூறியதாவது:

இந்தியாவிலேயே பாதுகாப்பு துறைக்கான முதல் சோதனை மையங்களை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த சோதனை மையங்களை அமைப்பதால், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மூலதன செலவு இல்லாமல், தங்களின் தயாரிப்புகளுக்கு, உலகத்தரம் வாய்ந்த சோதனைகளை, குறைந்த செலவில் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us