Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ ஏழு நாட்களுக்கும் குறைவாக பிக்சட் டிபாசிட் வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் யோசனை

ஏழு நாட்களுக்கும் குறைவாக பிக்சட் டிபாசிட் வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் யோசனை

ஏழு நாட்களுக்கும் குறைவாக பிக்சட் டிபாசிட் வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் யோசனை

ஏழு நாட்களுக்கும் குறைவாக பிக்சட் டிபாசிட் வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் யோசனை

ADDED : மே 27, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி,:ஏழு நாட்களுக்கு குறைவான காலவரையறை கொண்ட பிக்சட் டிபாசிட் திட்டங்களை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் இது தொடர்பான கருத்துகளை தெரிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறையும் டிபாசிட்டுகள்


வங்கிகளின் டிபாசிட் வளர்ச்சி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு மே மாதத்தில் 10 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 13 சதவீதமாக இருந்தது.

பங்குச் சந்தை முதலீடுகள், எஸ்.ஐ.பி., எனும் சீரான முதலீட்டு திட்டம் போன்ற கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்புகளை நோக்கி மக்கள் நகர்வதால், வங்கிகளில் டிபாசிட் குறைந்து வருகிறது.

இதையடுத்து, வங்கிகளில் மீண்டும் டிபாசிட்களை அதிகரிக்கும் விதமாக, ஏழு நாட்களுக்கும் குறைவான காலம் கொண்ட டிபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்த, எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்டவற்றிடம் ரிசர்வ் வங்கி கடந்த மாதம் விவாதம் நடத்திஉள்ளது.

இம்மாத இறுதிக்குள் தங்களது கருத்துகளை தெரிவிக்க, அனைத்து வங்கிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, இதுதொடர்பான தன் கருத்துகளை அடுத்த சில நாட்களில் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பணப்புழக்கம் உயரும்


இத்திட்டம் செயல்படுத்தப்படும்பட்சத்தில், வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், டிபாசிட்களுக்கான காலவரையறையை, வங்கிகள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப நிர்ணயிக்க அனுமதிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 2004 நவம்பர் முதல், உள்நாட்டு மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான பிக்சட் டிபாசிட்களின் குறைந்தபட்ச காலவரையறை ஏழு நாட்களாக உள்ளது. முன்பு இது 15 நாட்களாக இருந்தது.

வங்கிக்கு பயனில்லை


இதனிடையே ரிசர்வ் வங்கியின் இந்த யோசனை, கூடுதல் இருப்பு வைத்துள்ள நிறுவனங்கள், குறுகிய காலத்தில் வட்டி ஈட்ட பயனுள்ளதாக இருக்க வாய்ப்புள்ளதே தவிர, வங்கி களுக்கு பயனளிக்காது என, வங்கித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கான டிபாசிட்களை திரட்டி, அதைக்கொண்டு கடன் வழங்க இயலாது என்றும், இதனால் சொத்து மற்றும் பொறுப்பு கணக்குகளில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டிக்கு ஏற்ப வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைத்தன. இதனால் டிபாசிட் திரட்டுவது மேலும் கடினமாகி உள்ளது.

-- எஸ்.பி.ஐ., ரிசர்ச் ஆய்வறிக்கை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us