/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ வரப்போகுது புதிய வகை சொத்து முதலீடு கொஞ்சம் கூடுதல் தொகை வைத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு வரப்போகுது புதிய வகை சொத்து முதலீடு கொஞ்சம் கூடுதல் தொகை வைத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு
வரப்போகுது புதிய வகை சொத்து முதலீடு கொஞ்சம் கூடுதல் தொகை வைத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு
வரப்போகுது புதிய வகை சொத்து முதலீடு கொஞ்சம் கூடுதல் தொகை வைத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு
வரப்போகுது புதிய வகை சொத்து முதலீடு கொஞ்சம் கூடுதல் தொகை வைத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு
ADDED : ஜூலை 18, 2024 01:41 AM

புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' புதிய சொத்து வகை ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. பங்குகள், மியூச்சுவல் பண்டுகள் உள்ளிட்ட வற்றை சொத்துக்கள் என்று அழைப்போம்.
இதேபோல், மியூச்சுவல் பண்டுக்கும் பி.எம்.எஸ். எனப்படும், 'போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ்' என்பதற்கும் இடையில், புதிய வகை சொத்து ஒன்றை உருவாக்குவதற்கு, செபி திட்டமிட்டுள்ளது.
அது என்ன பி.எம்.எஸ்.,?
இந்தியாவில் பெரும் பணக்காரர்கள், தங்களிடம் உள்ள பணத்தை, பி.எம்.எஸ். வாயிலாக முதலீடு செய்வார்கள். பி.எம்.எஸ்., சில் முதலீட்டு ஆலோசகர்கள் இருப்பர். அவர்கள் எந்தெந்த இடங்களில் முதலீடு செய்யலாம் என்று வழி சொல்லித் தருவர்.
அவர்களே முதலீடு செய்து, லாபம் ஈட்டியும் தருவர். அதற்காக குறிப்பிட்ட தொகையை கட்டணமாகவும் பெற்றுக் கொள்வர். இந்த பி.எம்.எஸ்., முதலீட்டு முறையை, 'செபி' ஏற்கனவே நெறிமுறைப்படுத்தியுள்ளது.
அதில் முதலீடு செய்பவர்கள், குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாயோ அல்லது அதற்கு மேலோ பணம் போட வேண்டும்.
மியூச்சுவல் பண்டுகளில் 100 ரூபாய் முதற்கொண்டு முதலீடு செய்யலாம். சாதாரணவர்கள் முதல் அனைவரும் பயன்படுத்தும் முதலீட்டு வகையாக மியூச்சுவல் பண்டுகள் இருக்க, பி.எம்.எஸ்., என்பதோ, அதிபணக்காரர்கள் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கிறது.
இதற்கு இடைப்பட்ட அளவில் பலரும் முதலீட்டுக்கான பணத்தை வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு ஏற்ற ஒரு முதலீட்டு சொத்து வகை இதுநாள் வரை இல்லாமல் இருந்தது.
இத்தகைய நபர்கள், பல்வேறு மோசடி பேர்வழிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி, ஏமாற்றம் அடைகின்றனர். இன்னொரு விஷயம், இத்தகைய நடுத்தர முதலீட்டாளர்கள், அதிக அளவு 'ரிஸ்க்' எடுக்கவும் துணிந்தவர்கள்.
இவர்களுக்கு உரிய ஒரு முதலீட்டு வகை சொத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து, பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது.
ரூ.10 லட்சம் போதுமானது
இந்நிலையில், இந்த இடைவெளியை இட்டுநிரப்ப வேண்டும் என்பதற்காகவே, செபி புதிய சொத்து வகையை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் குறைந்தபட்ச முதலீடு 10 லட்சம் ரூபாயாக இருக்கும். இது மியூச்சுவல் பண்டு மாதிரியே இயங்கும்.
ஆனால், கொஞ்சம் 'ரிஸ்க்' அதிகம். வாடிக்கை யாளர்களிடம் இருந்து திரட்டப்படும் பணம், பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப்பட்டு, லாபம் ஈட்டித் தரப்படும்.
இந்தப் புதிய வகை சொத்துக்கு, புதிய பெயர் சூட்டப்படும். அதை மியூச்சுவல் பண்டு என்றோ, பி.எம்.எஸ்., என்றோ அழைக்கக்கூடாது.
வழக்கமான மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், இந்த புதிய வகை சொத்து திட்டத்தை வழங்குவதற்கு விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும்.
பண்டுகளுக்கு கட்டுப்பாடு
இந்த சொத்தை நிர்வகிப்பதற்கு என்று மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், தனியே ஒரு தலைமை முதலீட்டு அதிகாரியையும்; பண்டு மேலாளரையும் நியமிக்க வேண்டும். அவர்களுக்கு இந்த முதலீட்டுத் துறையில் தலா 10 ஆண்டுகள், ஏழு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
இதேபோல் எல்லா மியூச்சுவல் பண்டுகளும் இந்தப் புதிய வகைச் சொத்தை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது.
புதிய வகைச் சொத்தை வழங்கக்கூடிய மியூச்சுவல் பண்டு நிறுவனம், முந்தைய மூன்று ஆண்டுகளில், 10,000 கோடி ரூபாய் அளவுக்கு, வாடிக்கையாளர் சொத்துக்களை நிர்வகித்திருக்க வேண்டும்.
இதே காலகட்டத்தில், அவர்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் பாய்ந்திருக்கக் கூடாது.
இப்படியொரு சொத்து வகையை அறிமுகம் செய்யலாமா என்று 'செபி' முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்டிருக்கிறது. ஆகஸ்ட் 6 வரை, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை செபிக்கு அனுப்பி வைக்கலாம்.