ADDED : ஜூன் 18, 2025 11:10 PM

பெங்களூரு:''விதான் சவுதாவில் வரும் 21ம் தேதி நடக்கும் யோகா நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா கலந்து கொள்வார்,'' என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் வரும் 21ம் தேதி காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை யோகா நடக்கிறது. 3,000 பேர் பங்கு பெறுவர். கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைப்பார்.
முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள், லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், யோகா பயிற்சியாளர்கள் பங்கேற்பர்.
இந்த ஆண்டு 'ஒரு பூமிக்கு ஒரு ஆரோக்கியமான யோகா' என்ற கருப்பொருளில் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்ட, தாலுகா அளவிலும் 'யோகா சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்படும். இம்மாதம் கடைசி வாரத்தில், மைசூரு பல்கலைக்கழகத்திலும்; அடுத்த மாதம் நிமான்ஸ் மருத்துவமனை, ஸ்ரீ ஜெயதேவா இன்ஸ்டிடியூட்டிலும் கருத்தரங்கம் நடக்கும்.
'யோகா தனுஷ்' என்ற திட்டத்தின் மூலம் மாநிலம் முழுதும் 5 லட்சம் பேருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 5,000 பள்ளிகளில் யோகா நெறிமுறைகள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.