Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கேக் சாப்பிட்டு சிறுவன் பலி? விசாரணையில் 'திடுக்' தகவல்

கேக் சாப்பிட்டு சிறுவன் பலி? விசாரணையில் 'திடுக்' தகவல்

கேக் சாப்பிட்டு சிறுவன் பலி? விசாரணையில் 'திடுக்' தகவல்

கேக் சாப்பிட்டு சிறுவன் பலி? விசாரணையில் 'திடுக்' தகவல்

ADDED : ஜூன் 18, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
கே.பி.அக்ரஹாரா: 'ஆன்லைனில் ஆர்டர்' செய்த கேக் சாப்பிட்டு, 5 வயது சிறுவன் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரிஜ்ஜில் வைத்திருந்த பூஞ்சை தொற்றிய உணவை சாப்பிட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்ற உண்மை, உணவு பாதுகாப்பு துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு, கே.பி., அக்ரஹாராவில் வசிப்பவர் பால்ராஜ். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்த தம்பதியின் மகன் தீரஜ், 5. பால்ராஜ், 'ஸ்விக்கி' நிறுவனத்தில் உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை டெலிவரி செய்ய, பால்ராஜ் சென்றார்.

ஆனால், வாடிக்கையாளர் திடீரென கேக் ஆர்டரை ரத்து செய்துவிட்டார். இதனால் கேக்கை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

மனைவி, மகனுடன் சேர்ந்து பால்ராஜ் கேக்கை சாப்பிட்டார். மறுநாள் காலை மூன்று பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

வாந்தி, மயக்கத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்ட தீரஜ் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் உணவே விஷமாக மாறியதால், தீரஜ் இறந்தது தெரிந்தது.

பெற்றோரிடம் விசாரித்தபோது கடைசியாக கேக் சாப்பிட்டதாக கூறினர். இதனால் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் கேக் மீது, வாடிக்கையாளர்களுக்கு பயம் ஏற்பட ஆரம்பித்தது. கேக் தயாரிக்கும் பேக்கரிகளில், மாநகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையும் நடத்தினர்.

மேலும் தீரஜ் வேறு எதுவும் சாப்பிட்டாரா என, அவரது பெற்றோரிடம் கேட்டபோது 'வாங்கிபாத்' உணவு சாப்பிட்டதும் தெரிந்தது. அந்த உணவின் மாதிரியையும் எடுத்து ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில், எட்டு மாதங்களுக்கு பின் தற்போது தீரஜ் இறந்ததற்கு உண்மையான காரணம் வெளியாகி உள்ளது. அதாவது அவர் கேக் சாப்பிட்டு இறக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

பிரிஜ்ஜில் வைத்திருந்த 'வாங்கிபாத்' உணவில் பூஞ்சை தொற்றி உள்ளது. இதை கவனிக்காமல் அந்த உணவை, தீரஜிக்கு அவரது தாய் கொடுத்ததும், பூஞ்சை தொற்றிய உணவை சாப்பிட்டதால் வாந்தி, பேதி ஏற்பட்டு தீரஜ் இறந்ததும் தெரிய வந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us