Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்களுக்கு பிடித்தமான மத்துாரம்மா

பெண்களுக்கு பிடித்தமான மத்துாரம்மா

பெண்களுக்கு பிடித்தமான மத்துாரம்மா

பெண்களுக்கு பிடித்தமான மத்துாரம்மா

ADDED : ஜூன் 17, 2025 08:00 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு நகரில், புராதன பிரசித்தி பெற்ற கோவில்கள், பக்தர்களை ஈர்க்கின்றன. இவற்றில் மத்துாரம்மா கோவிலும் ஒன்று. பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கோவிலாகும்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், ஹுஸ்கூர் கிராமத்தில் மத்துாரம்மா கோவில் அமைந்துள்ளது. இது அம்பாளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோவிலாகும். 1,000 ஆண்டுகள் வரலாறு கொண்ட, புராதன கோவிலாகும்.

சோழ வம்சத்தினரால் கட்டப்பட்டது. கலைநயத்துடன் தென்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த கிராமத்து தேவதையாக கருதப்படுகிறது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட சிறப்பு நாட்களில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் வருவர். ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரலில் கோவிலில் நடக்கும் ரதோற்சவம், மிகவும் சிறப்பாக இருக்கும். 120 அடி உயரமான ரதம், ஒரு அழகான மாடி வீட்டை போன்றிருக்கும்.

ரதோற்சவம் நாளில் அக்கம், பக்கத்து கோவில்களில இருந்து வரும் பிரமாண்ட ரதங்கள், மத்துாரம்மா கோவில் ரதத்துடன் சேர்ந்து, நகரை சுற்றி ஊர்வலம் செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

எதிரிகளால் அபாயத்தை எதிர்கொண்டவர்கள், மனதில் அமைதி, நிம்மதி இன்றி தவிப்பவர்கள், இக்கோவிலுக்கு வந்து மத்துாரம்மனை தரிசித்தால், வாழ்க்கையில் கஷ்டங்கள் மறைந்து, மகிழ்ச்சி பொங்கும், தீய சக்திகள் விலகும் என்பது ஐதீகம். இதே காரணத்தால் பக்தர்கள், கோவிலை தேடி வருகின்றனர்.

திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாத தம்பதியர், இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், உடனடியாக திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

எப்படி செல்வது?

ஆனேக்கல்லின் ஹுஸ்கூரில் மத்துாரம்மா கோவில் அமைந்துள்ளது. பெங்களூரின் அனைத்து இடங்களில் இருந்தும், ஆனேக்கல்லுக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாடகை கார்கள், ஆட்டோக்கள் வசதிகளும் உள்ளன. விமானத்தில் வருவோர், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, பஸ்சிலோ அல்லது வாடகை காரிலோ, ஹுஸ்கூருக்கு வரலாம்.தரிசன நேரம்: காலை 7:00 முதல், 10:00 மணி வரை, மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us