Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துணி கடை உரிமையாளருக்கு 'ஹனி டிராப்' ரூ.10 லட்சம் கேட்ட ஏட்டு கைது; மூவருக்கு வலை

துணி கடை உரிமையாளருக்கு 'ஹனி டிராப்' ரூ.10 லட்சம் கேட்ட ஏட்டு கைது; மூவருக்கு வலை

துணி கடை உரிமையாளருக்கு 'ஹனி டிராப்' ரூ.10 லட்சம் கேட்ட ஏட்டு கைது; மூவருக்கு வலை

துணி கடை உரிமையாளருக்கு 'ஹனி டிராப்' ரூ.10 லட்சம் கேட்ட ஏட்டு கைது; மூவருக்கு வலை

ADDED : ஜூன் 17, 2025 08:01 AM


Google News
மைசூரு : 'ஹனி டிராப்' மூலம் துணிக்கடை வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார். தப்பிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மைசூரு, பிரியாபட்டணாவின் கம்பலபுரா கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். துணிக்கடை உரிமையாளர். இம்மாதம் 11ம் தேதி இரவு, இவரின் கடைக்கு வந்த இளம்பெண், துணிகள் வாங்கி உள்ளார்.

பின், 'எனக்கு புது வகையான ஆடைகள் அணிய ஆசை. எனவே, உங்கள் கடைக்கு புதிய ஆடைகள் வந்தால், எனக்கு தகவல் கொடுங்கள்' என கூறி, தினேஷ் குமாரின் மொபைல் போன் எண்ணை வாங்கிக் கொண்டார்.

அன்றிரவு 'வாட்ஸாப்'பில் தினேஷ் குமாருக்கு 'ஹாய்' என தகவல் அனுப்பினார். அதற்கு தினேஷ் பதிலளிக்கவில்லை. மறுநாள் காலை, அந்த எண்ணுக்கு போன் செய்தார். எதிர்முனையில் பேசிய இளம்பெண், தான் கடைக்கு வந்தது குறித்து தெரிவித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பின், தன் சில புகைப்படங்களை, தினேஷ் குமாருக்கு அனுப்பி வைத்தார். ஜூன் 14ல் மாலை 3:30 மணிக்கு தினேசை தொடர்பு கொண்ட இளம்பெண், மரடியூர் கிராமத்தில் இருப்பதாகவும் உறவினர் வெளியே சென்றிருப்பதாகவும் தான் தனியே இருப்பதாகக் கூறி வீட்டுக்கு வரும்படி தகவல் அனுப்பினார். அத்துடன் முகவரியையும் அனுப்பி உள்ளார்.

தினேஷ் குமாரும், அன்று மாலை காரில் மரடியூர் கிராமத்துக்கு சென்றார். வீட்டிற்கு சென்ற தினேஷ் குமாருக்கு காபி கொடுத்துவிட்டு, அவர் அருகில் இளம்பெண் அமர்ந்து கொண்டார்.

லேசாக அவரிடம் பேச்சு கொடுத்தபடியே, 'உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று கூறி, அவரை கட்டிப்பிடித்தார். 'கதவை மூடிவிட்டு வருகிறேன்' என்று கூறிச் சென்றவர், கதவை சாத்தி, தாழ்ப்பாள் போடாமல் வந்தார்.

இருவரும் அறையில் தனிமையில் இருக்கும்போது, திடீரென வீட்டுக்குள் புகுந்த மூன்று பேர், தினேஷ் குமாரையும், இளம்பெண்ணையும் தாக்கினர். தினேஷ்குமாரை அரை நிர்வாணமாக்கி, இளம்பெண்ணுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்தனர்.

சிறிது நேரத்தில் ஹூன்சூர் கிராம போலீஸ் நிலைய ஏட்டு சிவண்ணா அங்கு வந்தார். நடந்தவற்றை அவர்களிடம், தினேஷ் குமார் கூறினார். 'பயப்பட வேண்டாம்; அவர்களிடம் பேசி உன்னை விடுவிக்க கூறுகிறேன். எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். பணத்தை தரவில்லை என்றால், நானே இதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன்' என்று சிவண்ணா மிரட்டினார்.

இதனால் அச்சமடைந்த தினேஷ் குமார், தன் நண்பர் மகேந்திர சவுத்ரிக்கு போன் செய்து, 10 லட்சம் ரூபாயை, சிவண்ணாவிடம் கொடுக்க சொன்னார்.

சந்தேகமடைந்த மகேந்திர சவுத்ரி, தன் மற்றொரு நண்பர் மகேஷுடன், பிரியாபட்டணா போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரித்தார். போலீஸ் நிலையத்தில் இருந்த ரவீன் என்ற ஏட்டு, இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தார். தினேஷ் குமாரின் மொபைல் எண்ணை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர், அவருக்கு போன் செய்து, கும்பலுடன் பேசினார். 'தினேஷ் குமாரை விடுவிக்கவில்லை என்றால், எங்கள் வேலையை செய்ய வேண்டி வரும்' என எச்சரித்தார்.

அச்சமடைந்த கும்பல், தினேஷ் குமாரை அவர் வந்த காரில் ஏற்றி, அதிகாலை 1:15 மணியளவில் பைலகுப்பே டவுனில் இறக்கிவிட்டு, அங்கிருந்து தப்பினர். அங்கிருந்து தன் நண்பர்களுக்கு தினேஷ் குமார் போன் செய்து வரவழைத்தார். உடனடியாக பிரியாபட்டணா போலீசில் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார், ஏட்டை கைது செய்தனர். அவருக்கு உதவிய பெண் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏட்டு சிவண்ணாவிடம் விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us