/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கணவரின் ஜீவனாம்சத்துக்காக காத்திருக்காமல் 6 மாதத்தில் வேலை தேட மனைவிக்கு உத்தரவு கணவரின் ஜீவனாம்சத்துக்காக காத்திருக்காமல் 6 மாதத்தில் வேலை தேட மனைவிக்கு உத்தரவு
கணவரின் ஜீவனாம்சத்துக்காக காத்திருக்காமல் 6 மாதத்தில் வேலை தேட மனைவிக்கு உத்தரவு
கணவரின் ஜீவனாம்சத்துக்காக காத்திருக்காமல் 6 மாதத்தில் வேலை தேட மனைவிக்கு உத்தரவு
கணவரின் ஜீவனாம்சத்துக்காக காத்திருக்காமல் 6 மாதத்தில் வேலை தேட மனைவிக்கு உத்தரவு
ADDED : செப் 11, 2025 07:19 AM

பெங்களூரு : கணவரின் ஜீவனாம்சத்துக்காக காத்திருக்காமல், ஆறு மாதத்துக்குள் வேலை தேடிக்கொள்ளும்படி மனைவிக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த தம்பதி, திருமணமான இரண்டு மாதங்களில் விவாகரத்து கோரி, பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதில், மனைவி தரப்பில், 'கணவர் வீக்காக உள்ளார்' என்று குற்றம் சாட்டினார். கணவர் தரப்பில், 'தினமும் கொடுமைப்படுத்துவதாக' புகார் தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், '58,000 ரூபாய் மாத ஊதியம் பெறும் கணவர், மனைவிக்கு மாதந்தோறும், 20,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், கணவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதி லலிதா கன்னிகன்ட்டி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கணவர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மனுதாரரின் மனைவி எம்.டெக்., பயோ டெக்னாலஜி படித்து உள்ளார். திருமணத்துக்கு முன், நீல்சன் இந்திய பிரைவேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பின், பணிக்கு செல்லவில்லை. வேறு வேலைக்கு செல்லவும் தயாராக இல்லை. ஆனால், மாதந்தோறும் 20,000 ரூபாய் கொடுக்க உத்தரவிட்ட குடும்பநல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவி தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'கணவரின் கொடுமையால், என் மனுதாரர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார். இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், சமூகத்தின் இழிவை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போது அவரால் பணியாற்ற முடியாது. எனவே, குடும்பநல நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது' என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி லலிதா கன்னிகன்ட்டி அளித்த தீர்ப்பு:
தீவிர மன அழுத்தம், வேலை தேட முடியாது என்பதை காரணம் காட்டி, கணவரிடம் இருந்து மாதந்தோறும் பராமரிப்புக்கு ஜீவனாம்சம் பெற முடியாது. மனுதாரரின் மனைவி, எம்.டெக்., பயோ டெக்னாலஜி படித்ததுடன், வேலைக்கு தகுதியானவர்.
திருமணத்துக்கு முன் வேலைக்கு சென்று வந்துள்ளார். மனுதாரர் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் மூலம், மன அழுத்தத்தால், மனைவி வேலை தேட விரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது. வேலைக்கு தகுதியானவராக இருந்தும், வீட்டில் இருந்து கொண்டு, கணவரின் ஜீவனாம்சத்தை எதிர்பார்க்க கூடாது.
எனவே, அடுத்த ஆறு மாதங்களுக்குள் மனுதாரர் மனைவி வேலை தேடிக் கொள்ள வேண்டும். அதுவரை மாதந்தோறும், 10,000 ரூபாய், அவருக்கு கணவர் வழங்க வேண்டும். ஆறு மாதத்துக்கு பின், மனைவிக்கு வேலை கிடைத்தால், 10,000 ரூபாய் செலுத்தும் உத்தரவை, மறுபரிசீலனை செய்யும்படி, குடும்ப நல நீதிமன்றத்தில், கணவர் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவதற்கான தனது முயற்சிகள் தொடர்பான ஆவணங்களை, நீதிமன்றத்தில் மனைவி சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.