Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆர்.சி.பி., அணி நெரிசலுக்கு காரணம் யார்? 'திக் திக்' மனதுடன் முதல்வர் இன்று டில்லி பயணம்

ஆர்.சி.பி., அணி நெரிசலுக்கு காரணம் யார்? 'திக் திக்' மனதுடன் முதல்வர் இன்று டில்லி பயணம்

ஆர்.சி.பி., அணி நெரிசலுக்கு காரணம் யார்? 'திக் திக்' மனதுடன் முதல்வர் இன்று டில்லி பயணம்

ஆர்.சி.பி., அணி நெரிசலுக்கு காரணம் யார்? 'திக் திக்' மனதுடன் முதல்வர் இன்று டில்லி பயணம்

ADDED : ஜூன் 10, 2025 02:30 AM


Google News
பெங்களூரு: ஆர்.சி.பி., அணி பாராட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தபோது நடந்தவை குறித்து, கட்சி மேலிடம் உத்தரவின் பேரில், விளக்கம் அளிக்க முதல்வர் சித்தராமையா, 'திக் திக்' மனதுடன் இன்று டில்லி செல்கிறார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்.சி.பி., அணியின் பாராட்டு விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் தயானந்தா உட்பட சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மழுப்பல்


இதில், மாநில அரசின் மீது தப்பு இல்லையென வெளிக்காட்டுவதற்கு, முதல்வர் சித்தராமையா தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில், விதான் சவுதாவில் நடந்த விழாவில் உயிரிழப்பு ஏற்படவில்லை; சின்னசாமி மைதானத்தில் முன் சம்பவம் நடந்தது என மழுப்பி வருகிறார்.

இதை கேட்ட மத்திய அமைச்சர் குமாரசாமி, 'சித்தராமையா கர்நாடகாவுக்கு முதல்வரா அல்லது விதான் சவுதாவின் படிக்கட்டுகளுக்கு முதல்வரா' என, கிண்டல் அடித்திருந்தார்.

அதிருப்தி


இச்சம்பவத்தால், தேசிய அளவில் காங்கிரஸ் மீது அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மீது அதிருப்தி அடைந்தனர்.

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின்போது 'குதித்த' காங்கிரஸ் மேலிடம், தற்போது மவுனம் காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், ராகுல் கடும் அதிருப்தியில் உள்ளார்.

எனவே, கூட்ட நெரிசல் குறித்து விரிவாக விளக்கம் அளிக்குமாறு நேற்று காங்., மேலிடம் முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதிர்ச்சியில் உள்ள அவர், இன்று புதுடில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அப்போது, மூத்த தலைவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கிறார். இதற்காக தனி அறிக்கை தயாரித்துள்ளார்.

அறிக்கையில், விழாவை நடத்த அரசு அனுமதி அளித்ததா; போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் ஏன் என்பது போன்றவை இடம் பெற்றிருக்கும் என தெரிகிறது.

ஆட்சேபனை


இது மட்டுமின்றி, மேல்சபை நியமன உறுப்பினர் பட்டியல் குறித்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட் மற்றும் கட்சி சீனியர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளதால், அது குறித்தும் விளக்கம் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதல்வர் சித்தராமையா அளிக்கும் விளக்கங்கள், கட்சி மேலிடத்திற்கு திருப்தி அளிக்குமா அல்லது இரண்டரை ஆண்டு முதல்வர் பதவிக்கு முடிவு கட்டப்படுமா என்ற பரபரப்பு, கர்நாடக அரசியலில் எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us