/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மக்களிடம் குறை கேட்பது யார்? ஜனதா தரிசனத்தை மறந்த முதல்வர் மக்களிடம் குறை கேட்பது யார்? ஜனதா தரிசனத்தை மறந்த முதல்வர்
மக்களிடம் குறை கேட்பது யார்? ஜனதா தரிசனத்தை மறந்த முதல்வர்
மக்களிடம் குறை கேட்பது யார்? ஜனதா தரிசனத்தை மறந்த முதல்வர்
மக்களிடம் குறை கேட்பது யார்? ஜனதா தரிசனத்தை மறந்த முதல்வர்
ADDED : ஜூன் 04, 2025 12:37 AM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. வாக்குறுதி திட்டங்களை அமல்படுத்தினாலும், திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. ஏதாவது ஒரு குளறுபடி உள்ளது.
பேச்சுக்கு, பேச்சு மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்களிடம் சென்று கேட்டால், 'இந்த அரசு மூலம் மகிழ்ச்சியா, அது எங்கு உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி, எங்களுக்கு தொந்தரவு தான் கொடுக்கின்றனர்' என்று கிழித்து தொங்க விடுகின்றனர்.
சொகுசு வாழ்க்கை
கடந்த 2013 முதல் 2018 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியில், சித்தராமையா முதல்வராக இருந்த போது சுறுசுறுப்பாக செயல்பட்டார். மக்கள் பணியில் அலட்சியம் காட்டிய அமைச்சர்களை கண்டித்தார். இதனால் அவர் மீது, அமைச்சர்களுக்கு பயம் இருந்தது. தற்போது சித்தராமையா மீது எந்த அமைச்சருக்கும் பயம் இல்லை.
முதல்வர் நடத்தும் ஆய்வு கூட்டத்திற்கு கூட சரியாக வருவது இல்லை. மக்களை சந்திப்பது இல்லை. தங்கள் தொகுதி பக்கம் போகாமல், பெங்களூரிலேயே சொகுசு வாழ்க்கையில் உள்ளனர்.
அமைச்சர்கள் தான் இப்படி உள்ளனர் என்று பார்த்தால், முதல்வரும் அப்படி தான் உள்ளார். கடந்த முறை முதல்வராக இருந்த போது, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தார்.
ஆனால் இம்முறை வளர்ச்சி பணிகளை முதல்வர் துவக்கி வைப்பதே பார்ப்பதே அரிதாக உள்ளது. தனது சொந்த ஊரான மைசூருக்கு கூட அவர் சரியாக செல்வது இல்லை.
ஆர்வம் இல்லை
கடந்த முறை முதல்வராக இருந்த போது, வாரந்தோறும் புதன் அல்லது வியாழக் கிழமைகளில் ஜனதா தரிசனம் எனும் மக்கள் குறைகேட்பு கூட்டத்தை சித்தராமையா நடத்தினார்.
பெங்களூரு அல்லது அவர் எந்த ஊரில் இருக்கிறாரோ அந்த ஊரில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், பல்வேறு அமைப்பினர் முதல்வரை சந்தித்து, தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். மனு பெற்ற பின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை, சித்தராமையா கண்டித்தும் வந்தார்.
ஆனால் இந்த முறை ஜனதா தரிசனத்தை நடத்த கூட, ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக அவர் ஜனதா தரிசனம் நடத்தி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில், சித்தராமையா மூட்டுவலியால் பாதிக்கப்பட்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்து தான் சென்றார். இதனால், ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
தற்போது அவர் குணம் அடைந்தாலும், மக்களை சந்திப்பதே இல்லை. சமீபத்தில் பெங்களூரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற போதும், பெரும்பாலான நேரம் பஸ்சில் அமர்ந்தே ஆய்வு செய்தார். சாலையில் இறங்கி நடக்கவே இல்லை.
இந்த ஆண்டின் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம், மாநிலத்தில் முதல்வர் மாற்றம் நடக்கும் என்றும், துணை முதல்வர் சிவகுமார் முதல்வர் ஆவார் என்றும் பேச்சு அடிபடுகிறது. பதவியை தக்க வைக்க முதல்வர் போராடுகிறார். ஆனால் அவர் நீடிப்பாரா என்று உறுதியான தகவல் இல்லை. இதனால் அவர் மனஉளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.
'முதல்வர் பதவியை விட்டு நாமே செல்ல போகிறோம்; யார் எப்படி போனால் என்ன' என்ற மனநிலைக்கு அவர் வந்து விட்டதாகவும், இதனால் தான் ஜனதா தரிசனம் உட்பட எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -