ADDED : செப் 09, 2025 05:08 AM

பெங்களூரு: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி. கோவாவில் சூதாட்ட விடுதி நடத்தி அதில் கிடைக்கும் பணத்தை, சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில், கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 18 கோடி ரொக்கம்; ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அமலாக்கத்துறையின் 15 நாள் காவல் நிறைவு பெற்ற நிலையில், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். வீரேந்திர பப்பி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கிரண் ஜவளி, தன் மனுதாரருக்கு ஜாமின் வழங்கும்படி கேட்டார்.
இதற்கு அமலாக்கத்துறை வக்கீல் பிரமோத் சந்திரா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'வீரேந்திர பப்பிக்கு எதிராக முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை சேகரித்துள்ளது. அவரிடம் இருந்து இதுவரை 100 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் கிடைத்து வெளியே சென்றால், சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், வரும் 22ம் தேதி வரை வீரேந்திர பப்பியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் வீரேந்திர பப்பி அடைக்கப்பட்டார்.