/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் நாணயம் மா.க., வாரியம் இயந்திரம் பொருத்துகிறது பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் நாணயம் மா.க., வாரியம் இயந்திரம் பொருத்துகிறது
பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் நாணயம் மா.க., வாரியம் இயந்திரம் பொருத்துகிறது
பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் நாணயம் மா.க., வாரியம் இயந்திரம் பொருத்துகிறது
பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் நாணயம் மா.க., வாரியம் இயந்திரம் பொருத்துகிறது
ADDED : மே 23, 2025 11:03 PM

பெங்களூரு:கர்நாடகாவை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால், நாணயம் அளிக்கும் இயந்திரம் அமைக்க தயாராகிறது.
சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தரமற்ற பிளாஸ்டிக் கவர்கள், குடிநீர் பாட்டில்களை பயன்படுத்திய பின், சாலைகள், பூங்காக்கள், வனப்பகுதிகள் என கண்ட, கண்ட இடங்களில் வீசுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது. வன விலங்குகள், வளர்ப்பு பிராணிகளுக்கும் பிளாஸ்டிக் அபாயம் ஏற்படுகிறது.
தடை விதிப்பு
பிளாஸ்டிக்கை தின்று, கால்நடைகள் இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதை உணர்ந்தே தரமற்ற பிளாஸ்டிக் கவர்கள், பொருட்கள் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு கர்நாடக அரசு, பல ஆண்டுகளுக்கு முன்பே தடை விதித்தது. ஆனால் பிளாஸ்டிக் பயன்பாடு, விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கிடையே, கர்நாடகாவை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி பூண்டுள்ளது.
இதற்காக பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால், நாணயம் வழங்கும் தொடுதிரை இயந்திரம் அமைக்க திட்டமிட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினமான, ஜூன் 5ம் தேதியன்று, இதன் செயல் முறை விவரிக்கப்படும்.
இது தொடர்பாக, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சாமி கூறியதாவது:
மாநிலத்தில் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டம் வகுத்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால், நாணயம் வழங்கும் இயந்திரம் அமைக்க தயாராகிறோம்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெங்களூரு அரண்மனை மைதானத்தில், நிகழ்ச்சி நடத்தப்படும். அன்றைய தினம் செயல்முறை விளக்கப்படும்.
குறிப்பிட்ட இடம்
உள்ளாட்சிகளின் ஒருங்கிணைப்பில், இம்மையம் அமைக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும். மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று, இயந்திரம் தயாரித்துள்ளது.
இவைகள் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்படும். பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால், ஒரு ரூபாய் நாணயம் கிடைக்கும். இந்த இயந்திரம் அமைக்க, உள்ளாட்சிகளே பணம் கொடுக்க வேண்டும்.
இவற்றை அந்நிறுவனங்களே நிர்வகிக்கும். பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த, இத்திட்டம் உதவியாக இருக்கும்.
பெங்களூரின் ஏரிகளில் கழிவு நீர் கலக்காமல், பார்த்து கொள்ள வேண்டும். கழிவு நீர் சுத்திகரிப்பு யூனிட்கள் அமைக்க வேண்டும்.
இங்கு சுத்தப்படுத்திய நீரை, ஏரியில் பாய்ச்ச வேண்டும். தற்போது சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் பாய்வதால், ஆறுகள், கால்வாய்கள், நிலத்தடி நீர் அசுத்தம் அடைகிறது.
மக்களுக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஆற்றில், கழிவு நீர் கலந்து அசுத்தமாகிறது. இப்பிரச்னைக்கு இப்போதே தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் கடவுளே வந்தாலும், ஏரிகள், ஆறுகளை காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.