/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அடர்ந்த வனத்துக்குள் சிக்கிய மாணவ - மாணவியர் மீட்பு அடர்ந்த வனத்துக்குள் சிக்கிய மாணவ - மாணவியர் மீட்பு
அடர்ந்த வனத்துக்குள் சிக்கிய மாணவ - மாணவியர் மீட்பு
அடர்ந்த வனத்துக்குள் சிக்கிய மாணவ - மாணவியர் மீட்பு
அடர்ந்த வனத்துக்குள் சிக்கிய மாணவ - மாணவியர் மீட்பு
ADDED : ஜூன் 11, 2025 02:48 AM

சிக்கமகளூரு: மலையேற்றத்துக்கு சென்ற, 11 மாணவ - மாணவியர் வழி மாறி அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். ஆறு மணி நேரத்துக்கு பின், போலீசாரால் மீட்கப்பட்டனர்.
சித்ரதுர்கா நகரின் பசவேஸ்வரா மருத்துவ கல்லுாரியின் ஐந்து மாணவர்கள் உட்பட, பல்வேறு மருத்துவ கல்லுாரிகளில் படிக்கும் 11 மாணவ - மாணவியர், சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவின் பல்லாளராயன துர்கா மலையில், மலையேற்றம் செய்ய விரும்பினர். இதற்காக பதிவு செய்து கொண்டனர்.
நேற்று முன்தினம் காலை, 11 மாணவ - மாணவியரும் மலையேற்றத்துக்கு புறப்பட்டனர். ராணிஜரி அருகில் இருந்து, இவர்கள் மலையேற்றத்தை துவக்கியிருக்க வேண்டும். ஆனால் கூகுள் மேப் தவறாக காட்டியதால், வழிதெரியாமல் மங்களூரின் பன்டாஜி வழியாக மலையேற்றத்தை துவங்கினர்.
பன்டாஜி நீர்வீழ்ச்சி வரை சென்றனர். அத்துடன் மலையேற்றத்தை முடித்துக் கொண்டு, மேப் பார்த்து, பல்லாலராயனதுர்கா, ராணிஜரி பாதையை அடையாளம் கண்டு நடந்து வந்தனர். ஆனால் இருள் சூழ்ந்ததால், திசை மாறினர். நெட் ஒர்க் கிடைக்காததால், கூகுள் மேப்பும் செயல்படவில்லை. வனப்பகுதியை சுற்றி சுற்றி மாணவ - மாணவியர் சோர்வடைந்தனர்.
இதுதொடர்பாக, மூடிகெரே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உள்ளூர் இளைஞர்களுடன், உடனடியாக வனப்பகுதிக்கு சென்றனர். கற்கள், முட்கள் நிறைந்த கரடு முரடான அடர்த்தியான வனப்பகுதியில் மாணவ - மாணவியரை தேடினர்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில், 11 பேரையும் கண்டுபிடித்தனர். அனைவரையும் வாகனத்தில் ஏற்றி, சித்ரதுர்காவுக்கு அனுப்பினர். வனவிலங்குகள், விஷ ஜந்துக்கள் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கியும், மாணவ - மாணவியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கூகுள் மேப்பை நம்பி, அபாயமான வனப்பகுதிக்கு வருவது சரியல்ல. அனைத்து இடங்களையும் நன்கு தெரிந்து வைத்துள்ள வழிகாட்டிகளை, உடன் அழைத்துச் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.