/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒத்திவையுங்கள்! காங்., அரசுக்கு, ஒக்கலிகர் சமூகம் நெருக்கடி ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒத்திவையுங்கள்! காங்., அரசுக்கு, ஒக்கலிகர் சமூகம் நெருக்கடி
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒத்திவையுங்கள்! காங்., அரசுக்கு, ஒக்கலிகர் சமூகம் நெருக்கடி
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒத்திவையுங்கள்! காங்., அரசுக்கு, ஒக்கலிகர் சமூகம் நெருக்கடி
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒத்திவையுங்கள்! காங்., அரசுக்கு, ஒக்கலிகர் சமூகம் நெருக்கடி
ADDED : செப் 20, 2025 11:08 PM

பெங்களூரு: 'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை 45 நாட்களுக்கு ஒத்திவையுங்கள்' என அரசுக்கு, ஒக்கலிகர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நாளை துவங்கி 15 நாட்கள் நடக்க உள்ளது. இதுகுறித்து விவாதிக்க, பெங்களூரு விஜயநகரில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தில் ஒக்கலிகர் சமூக தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி, மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபா, துணை முதல்வர் சிவகுமார், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள் செலுவராயசாமி, எம்.சி.சுதாகர், மூன்று கட்சிகளின் ஒக்கலிகர் சமூகத்தின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், மாநில ஒக்கலிகர் சங்க தலைவர் கெஞ்சப்ப கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் ஒக்கலிகர் சமூகத்திற்கு ஏற்படும் சாதக, பாதகம் குறித்து விவாதிக்கப்பட்டது.
* கூடாது
ஆலோசனைக்கு பின், மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி அளித்த பேட்டி:
புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும், அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நவராத்திரி நேரத்தில் கணக்கெடுப்பு நடத்துவது சரியல்ல. தசரா விடுமுறைக்காக எல்லாரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவர். கணக்கெடுப்புக்கு 450 கோடி ரூபாய் அரசு செலவு செய்ய உள்ளது. இந்த பணம் வீணாகி விட கூடாது என்பதே எங்கள் எண்ணம்.
இதனால் இப்போது கணக்கெடுப்பு நடத்துவதை ஒத்திவைத்து விட்டு, 45 நாட்களுக்கு பின், கணக்கெடுப்பு நடத்தலாம் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். கணக்கெடுப்பு மூலம் நமது சமூகத்தினர் யாரும் குழப்பமடைய வேண்டாம். எந்த காரணத்திற்கும் ஒக்கலிகர்களை கிறிஸ்துவர்களுடன் சேர்க்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
* ஒற்றுமை அவசியம்
துணை முதல்வர் சிவகுமார் பேசுகையில், '' அனைத்து சமூகத்தினருக்கும் நியாயம் கிடைக்க, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்மூலம் யாருக்கும் எந்த பாதகமும் ஏற்படாத வகையில், கணக்கெடுப்பு நடத்த அரசு அனைத்து நடவடிக்கை எடுக்கும்,'' என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசுகையில், ''எந்த சமூகம் பெரியது; எந்த சமூகம் சிறியது என்பதை இந்த கணக்கெடுப்பு வெளிப்படுத்தும். ஆனால் இதில் ஏதாவது தவறு ஏற்பட்டால், நம் எதிர்காலம் பாழாகிவிடும். ஆரம்பத்தில் இருந்தே நம் சமூகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ஒற்றுமையை காட்ட நான் அனைவரும் ஒருங்கிணைவது அவசியம்,'' என்றார்.
கூட்டத்தில் பேசிய அனைத்து தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.