/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நண்பரை கொன்று உடலுடன் 2 நாட்கள் இருந்தவர்கள் கைது நண்பரை கொன்று உடலுடன் 2 நாட்கள் இருந்தவர்கள் கைது
நண்பரை கொன்று உடலுடன் 2 நாட்கள் இருந்தவர்கள் கைது
நண்பரை கொன்று உடலுடன் 2 நாட்கள் இருந்தவர்கள் கைது
நண்பரை கொன்று உடலுடன் 2 நாட்கள் இருந்தவர்கள் கைது
ADDED : ஜூன் 26, 2025 12:55 AM
பண்டேபாளையா : பெங்களூரு, பண்டேபாளையாவில் உள்ள அம்பேத்கர் நகரில், வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வந்தது. வீட்டு உரிமையாளர், வாடகைக்கு தங்கியிருந்த உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சதீஷ் என்பவரிடம் கேட்டுள்ளார். அவர் மழுப்பலாக பதில் அளித்தார்.
சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர், பண்டபோளையா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த அவர்கள், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அதே மாநிலம், கோரக்பூரை சேர்ந்த சைலேஷ் யாதவ் என்பவர் இறந்து, அழுகிய நிலையில் கிடந்தார். இதுதொடர்பாக சதீஷ், அருண் யாதவ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சைலேஷ் யாதவ், 30, சதீஷ், அருண் யாதவ், பிரேந்திர யாதவ் ஆகியோர் இங்கு தனித்தனி வீடுகளில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
பிரேந்திர யாதவுக்கு, ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக மற்றவர்களிடம் சைலேஷ் யாதவ் கூறி வந்தார். இது பிரேந்திர யாதவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 18ல், மது அருந்த வரும்படி சதீஷ் வீட்டுக்கு சைலேஷ், அருணை பிரேந்திர யாதவ் அழைத்துள்ளார். அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். காலையில் சைலேஷ் யாதவ் இறந்து கிடந்துள்ளார். பிரேந்திர யாதவ் மாயமாகி உள்ளார்.
இதனால், பயந்து போன மற்ற இருவரும் என்ன செய்வது என தெரியாமல், உடலுடன் வீட்டிற்குள்ளேயே இரண்டு நாட்கள் இருந்துள்ளனர். துர்நாற்றத்தால் உரிமையாளர் தகவல் தெரிவிக்கவே, சம்பவம் வெளியில் தெரிந்தது.
சந்தேகத்திற்கிடமான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினோம். பிரேத பரிசோதனையில் சைலேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சதீஷ், அருண் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேந்திர யாதவை தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.