/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத் சமூகம் போர்க்கொடி ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத் சமூகம் போர்க்கொடி
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத் சமூகம் போர்க்கொடி
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத் சமூகம் போர்க்கொடி
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத் சமூகம் போர்க்கொடி
ADDED : செப் 10, 2025 02:06 AM
கர்நாடகாவின் தென்மாவட்டங்களில் ஒக்கலிகர் சமூகத்தினர் வலுவாக இருப்பது போன்று, வடமாவட்டங்களில் லிங்காயத் சமூகம் வலுவாக உள்ளது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில், எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், லிங்காயத் சமூக ஓட்டுகள், முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த சமூக மடாதிபதிகள் கைகாட்டும் கட்சிக்கு மக்கள் ஓட்டு போடுகின்றனர்.
பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா, லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், லிங்காயத் சமூகம் தொடர்ந்து, பா.ஜ.,வை ஆதரித்தது. லிங்காயத்தின் பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 2023 தேர்தலில் காங்கிரசை லிங்காயத் சமூகம் ஆதரித்தது.
2 பிரிவுகள் லிங்காயத் சமூகத்தில் லிங்காயத், வீரசைவ என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. லிங்காயத் சமூகத்தினர், தங்கள் கடவுளாக சிவனை கருதுகின்றனர். ஆனால், இவர்களிடம் உருவ வழிபாடு இல்லை. பசவண்ணரின் தத்துவத்தை கடைப்பிடிக்கின்றனர். அதே நேரத்தில் வீரசைவர்களிடம் உருவ வழிபாடு உள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வீரசைவ, லிங்காயத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கு முதல்வர் சித்தராமையாவும் ஒப்புக் கொண்டார். மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் பா.ஜ., கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. சமூகத்தை உடைக்க முயற்சிப்பதாக சித்தராமையாவை வசைபாடினர்.
கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பின், லிங்காயத்தை இரண்டாக பிரிக்கும் முயற்சி அப்படியே கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் லிங்காயத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழ துவங்கி உள்ளது. இதற்கு காரணம் மறு ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை என்று கூறப்படுகிறது.
மவுசு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 156 கோடி ரூபாய் செலவு செய்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு லிங்காயத் சமூகம் எதிர்ப்பு தெரிவித்தது.
அதிகாரிகள் களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை என்றும், தவறான அறிக்கை கொடுத்து இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் உத்தரவின்படி, மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்க உள்ளது. வரும் 22ம் தேதி முதல் ஜாதிவாரி கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதற்கும் லிங்காயத் சமூகம் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இந்த கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் இருப்பது தெரியவந்ததால், தங்கள் மவுசு குறைந்துவிடும் என்று நினைக்கின்றனர். இதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும்போது, ஹிந்து லிங்காயத், ஹிந்து வீரசைவ லிங்காயத் என்று குறிப்பிட வேண்டாம் என்றும், ஒரே மாதிரியாக வீரசைவ லிங்காயத் என்று குறிப்பிடும்படியும், மடாதிபதிகள், தலைவர்கள், தங்கள் சமூகத்தினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
அப்படி குறிப்பிடும்படிபோது, இடஒதுக்கீடு நிறைய கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இந்த விஷயத்தை அரசு எப்படி கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- நமது நிருபர் -