ADDED : ஜூன் 11, 2025 01:03 AM
மாண்டியா : சாம்ராஜ்நகர், கொள்ளேகாலின் காமகெரெ கிராமத்தை சேர்ந்தவர் சந்தன் கவுடா, 24. இவரும், இதே கிராமத்தில் வசித்த ஆஷா, 19, என்பவரும் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு, இரண்டு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை பொருட்படுத்தாமல், ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, சந்தன் கவுடாவும், ஆஷாவும் திருமணம் செய்து கொண்டனர்.
மாண்டியா மாவட்டம், மத்துாரில் தம்பதி வசித்து வந்தனர். தற்போது, ஆஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆரம்பத்தில் தம்பதி சந்தோஷமாகவே இருந்தனர். அதன்பின் இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. மனைவி நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பத்தில் பிரச்னை துவங்கியது.
ஆஷா யாருடன் போனில் பேசினாலும், சண்டை போட்டார். மனைவிக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டினார். சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
கடந்த 7ம் தேதி வழக்கம் போன்று தம்பதி இடையே காரசார வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த சந்தன் கவுடா, துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து, கொலை செய்துவிட்டு தப்பியோடினார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி, அங்கு வந்த மத்துார் போலீசார், ஆஷாவின் உடலை மீட்டனர். சந்தன் கவுடாவை நேற்று காலை கைது செய்தனர்.