Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரு மாநகராட்சியை 5 பாகமாக பிரிக்க அரசு திட்டம்! நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடத்தவும் யோசனை

பெங்களூரு மாநகராட்சியை 5 பாகமாக பிரிக்க அரசு திட்டம்! நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடத்தவும் யோசனை

பெங்களூரு மாநகராட்சியை 5 பாகமாக பிரிக்க அரசு திட்டம்! நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடத்தவும் யோசனை

பெங்களூரு மாநகராட்சியை 5 பாகமாக பிரிக்க அரசு திட்டம்! நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடத்தவும் யோசனை

ADDED : ஜூன் 12, 2024 11:31 PM


Google News
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சியை ஐந்து பாகமாக பிரிப்பது தொடர்பாக, மாநில அரசு ஆலோசிக்கிறது. மூன்றரை ஆண்டுகளாக, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், தொய்வடைந்துள்ள பெங்களூரு மாநகராட்சிக்கு, நடப்பாண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்துவது குறித்தும் அரசு யோசித்து வருகிறது.

பெங்களூரு மாநகராட்சியில், 2020 செப்டம்பர் 10ல், மக்கள் பிரதிநிதிகள் பதவி காலம் முடிவடைந்தது. அன்றைய பா.ஜ., அரசு, கொரோனா தொற்றை காரணம் காண்பித்து, தேர்தலை தள்ளி வைத்தது. மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரியை நியமித்து, தேர்தலை கைகழுவியது. அன்று முதல் இன்று வரை, மாநகராட்சியில் அதிகாரிகளின் தர்பார் நடந்து வருகிறது.

மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த, அரசுக்கு உத்தரவிட கோரி, முன்னாள் கவுன்சிலர்கள் சிலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கால அவகாசம்


மனுவை விசாரித்த போது, 'வார்டுகளை பிரிக்க வேண்டும், மாநகராட்சியை மூன்று அல்லது நான்காக பிரிக்க வேண்டும்' என கூறி, கால அவகாசம் கேட்டது.

அதன்பின் அன்றைய பா.ஜ., அரசு, பெங்களூரு மாநகராட்சியின், 198 வார்டுகளின் எண்ணிக்கையை, 243 ஆக அதிகரித்தது. பெங்களூரு மாநகராட்சிக்கு தனி சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தை பயன்படுத்தி, மூன்று ஆண்டுகள் வரை, தேர்தலை தள்ளி வைத்தது.

கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், மாநகராட்சி வார்டு எண்ணிக்கையை, 243லிருந்து, 225 ஆக குறைத்தது.

ஆனால் பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த, ஆர்வம் காண்பிக்கவில்லை. நடப்பாண்டு இறுதியில், தேர்தல் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக மாநகராட்சியை, ஐந்தாக பிரிக்க ஆலோசிக்கிறது.

சித்தராமையா முதன் முறையாக, 2013ல் முதல்வரான போதே, பெங்களூரு மாநகராட்சியை பிரிக்க விரும்பினார். எத்தனை பிரிவாக பிரிப்பது என்பது குறித்து, ஆய்வு நடத்த பி.எஸ்.பாட்டீல் தலைமையில், அரசு கமிட்டி அமைத்தது.

இந்த கமிட்டியும், மாநகராட்சியை ஐந்தாக பிரிக்கும்படி சிபாரிசு செய்து அறிக்கை அளித்திருந்தது. 2018ல் ஆட்சி மாறியதால், அறிக்கையை செயல் படுத்த முடியவில்லை.

கடந்த ஆண்டு மீண்டும் காங்கிரஸ் அரசு வந்த பின், பி.எஸ்.பாட்டீல் தலைமையில் மீண்டும் கமிட்டி அமைத்த அரசு, மாநகராட்சியை பிரிப்பது குறித்து, அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது. கமிட்டியும் மற்றொரு அறிக்கை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்ட திருத்தம்


மேலும், மூன்றரை ஆண்டுகளாக, மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், நகரின் வளர்ச்சி பணிகள் பாதிக்கின்றன. மக்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.

மழைக்காலம் துவங்கி, பல்வேறு இடங்களில் அசம்பாவிதங்கள் நடக்கின்றன. விரைவில் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி, கவுன்சிலர்களை தேர்ந்து எடுக்கும்படி, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில், பெங்களூரு மாநகராட்சியை, ஐந்தாக பிரிக்க அரசு ஆலோசிக்கிறது. இதற்காக தற்போது அமலில் உள்ள, பெங்களூரு மாநகராட்சி சட்டம் - 2020க்கு, திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஜூலையில் நடக்கும் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில், சட்ட திருத்தம் கொண்டு வரப்படலாம்.

சட்டசபையில் ஒப்புதல் பெற்று, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். தேர்தல் நடத்த கால அவகாசம் கேட்கப்படும். ஒருவேளை நீதிமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால், நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படும். இப்போதிருந்தே மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகும்படி, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us