/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தார்வாட் காங்., - எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு மீண்டும் சிறை! : பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் கோர்ட் அதிரடிதார்வாட் காங்., - எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு மீண்டும் சிறை! : பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் கோர்ட் அதிரடி
தார்வாட் காங்., - எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு மீண்டும் சிறை! : பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் கோர்ட் அதிரடி
தார்வாட் காங்., - எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு மீண்டும் சிறை! : பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் கோர்ட் அதிரடி
தார்வாட் காங்., - எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு மீண்டும் சிறை! : பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் கோர்ட் அதிரடி
ADDED : ஜூன் 13, 2025 11:16 PM

பெங்களூரு: பா.ஜ., பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியின் ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று சரணடைந்தார். அவரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர்.
தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., கவுன்சிலர் யோகேஷ் கவுடா, 2016 ஜூன் 15ம் தேதியன்று, தனக்கு சொந்தமான உடற்பயிற்சி மையத்தில் இருந்தார். அங்கு வந்த மர்ம கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்தது.
முதலில் இந்த வழக்கை தார்வாட் போலீசார், விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர். அதன்பின் 2020ல் இந்த வழக்கை அன்றைய பா.ஜ., அரசு, சி.பி.ஐ.,க்கு ஒப்படைத்தது. விரிவாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், கொலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு தொடர்பிருப்பதை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்தனர்.
ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த அவர், ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் பல முறை முயன்றும், அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியில் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், 'சம்பவம் நடந்த தார்வாட் மாவட்டத்தில் நுழைய கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ முயற்சிக்கக் கூடாது. அதிகாரிகள் அழைக்கும்போது, நேரில் சென்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, நிபந்தனை விதித்தது.
அதன்படி அவர், அவ்வப்போது விசாரணைக்கு ஆஜரானார். தார்வாடுக்கும் செல்லவில்லை. 2023ல் சட்டசபை தேர்தலில், தார்வாட் தொகுதியில் போட்டியிட்டபோதும், பிரசாரம் செய்ய தார்வாடுக்கு செல்ல, நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
பதவி
சமூக ஊடகங்கள் வாயிலாக வினய் குல்கர்னி பிரசாரம் செய்தார். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தனக்கு முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், இடம் கிடைக்கும் என, வினய் எதிர்பார்த்தார். ஆனால் கொலை வழக்கில் ஜாமினில் இருப்பதால் அமைச்சர் பதவி கை நழுவியது.
தன் அரசியல் எதிர்காலத்தை கருதி, கொலை வழக்கில் இருந்து விடுபட, வினய் குல்கர்னி முயற்சித்தார். சில முக்கியமான சாட்சிகளை விலைக்கு வாங்க முற்பட்டார். ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக பேரம் பேசியதாக கூறப்பட்டது. இதையறிந்த சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றது. சாட்சிகளை கலைக்க முற்படும் வினய் குல்கர்னியின் ஜாமினை ரத்து செய்ய சி.பி.ஐ., வலியுறுத்தியது.
இதை தீவிரமாக கருதிய நீதிமன்றம், கடந்த வாரம் வினய் குல்கர்னியின் ஜாமினை ரத்து செய்தது. ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
இந்த நிலையில், சரணடைய அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வினய் குல்கர்னி சார்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் உடனடியாக நிராகரித்தது.
'சாட்சிகளை தொடர்பு கொண்டுள்ளீர்கள். உங்கள் செல்வாக்கை பயன்படுத்தியுள்ளீர்கள். இதற்கு சாட்சிகள் உள்ளன. எனவே ஜாமின் ரத்து உத்தரவை திரும்பப் பெற முடியாது. நீங்கள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்' என, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
கைது
இதையடுத்து, பெங்களூரின் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வினய் குல்கர்னி நேற்று சரணடைந்தார். அவர் மிரட்டியதாக கூறப்படும் சாட்சியான பெண்ணும் ஆஜராகி, நடந்ததை விவரித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள், வினய் குல்கர்னியை முறைப்படி கைது செய்தனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு வினய் குல்கர்னி கொண்டு செல்லப்பட்டார். அவர் கைதானதும், சிறை முன்பாக கூடியிருந்த ஆதரவாளர்கள், அழுது கண்ணீர் சிந்தினர்.
இதுகுறித்து, அரசு தரப்பு சிறப்பு வக்கீல் கங்காதர் ஷெட்டி அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்றம் வினய் குல்கர்னியின் ஜாமினை, கடந்த வாரம் ரத்து செய்தது. எனவே அவர் நேற்று மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சி.பி.ஐ., கைது செய்து சிறைக்கு அனுப்பியது. சமுதாயத்துக்கு அது ஒரு நல்ல செய்தி.
தவறு செய்தவர்கள், யாராக இருந்தாலும் தண்டனை கிடைத்தே தீரும். நீதிமன்றத்திலேயே நேரடியாக, மறைமுகமாக சாட்சிகளை மிரட்டுகின்றனர். இது போன்றவர்கள் மீது, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். வினய் குல்கர்னி தரப்பினரால் மிரட்டலுக்கு ஆளான பெண்ணுக்கு, போதிய பாதுகாப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.