/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சின்னசாமி ஸ்டேடிய உயிரிழப்பு விவகாரத்தில் நெருக்கடி!: அரசியல் செயலரை நீக்கினார் சித்தராமையா சின்னசாமி ஸ்டேடிய உயிரிழப்பு விவகாரத்தில் நெருக்கடி!: அரசியல் செயலரை நீக்கினார் சித்தராமையா
சின்னசாமி ஸ்டேடிய உயிரிழப்பு விவகாரத்தில் நெருக்கடி!: அரசியல் செயலரை நீக்கினார் சித்தராமையா
சின்னசாமி ஸ்டேடிய உயிரிழப்பு விவகாரத்தில் நெருக்கடி!: அரசியல் செயலரை நீக்கினார் சித்தராமையா
சின்னசாமி ஸ்டேடிய உயிரிழப்பு விவகாரத்தில் நெருக்கடி!: அரசியல் செயலரை நீக்கினார் சித்தராமையா
ADDED : ஜூன் 06, 2025 11:29 PM

ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐ.பி.எல்., கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதை கொண்டாட கடந்த 4ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும் விதான் சவுதாவிலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இரு இடங்களிலும் சேர்த்து மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் சின்னசாமி மைதானத்தின் நுழைவு வாயில் அருகே நெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம், தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அவசரம், அவசரமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, 11 உயிர்களை அரசு காவு வாங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தங்கள் பதவியை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ராஜினாமா செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய கமிஷனர்
கடும் நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாநில அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டினார். அப்போது, முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்தராஜ் மீது சில அமைச்சர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். கோவிந்தராஜால் தான் அரசுக்கு கெட்ட பெயர் என்றும் கூறி இருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, கூடுதல் போலீஸ் கமிஷனர் விகாஸ்குமார், மத்திய மண்டல டி.ஜி.பி., சேகர் தெக்கண்ணவர், மத்திய மண்டல ஏ.ஜி.பி., பாலகிருஷ்ணா, கப்பன் பார்க் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிரிஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அமைச்சர்கள் அதிருப்தி
ஆர்.சி.பி., வெற்றியை கொண்டாட, லட்சக்கணக்கில் ரசிகர்கள் வருவர் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று அரசு தரப்பு கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் பதிலடியாக, இதுபற்றி உளவுத்துறை தகவல் தெரிவிக்கவில்லையா என்று, கேள்வி எழுப்பின.
உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றி வந்த ஹேமந்த் நிம்பால்கர், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., அஞ்சலி நிம்பால்கரின் கணவர். தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குகிறதா என்றும் கேள்வி எழுந்தது.
இந்த கேள்விகளால் கடுப்பான சித்தராமையா, உளவுத்துறையிலும் மாற்றம் செய்யப்படும் என, நேற்று முன்தினம் இரவு அறிவித்திருந்தார். அதன்படி, கூடுதல் டி.ஜி.பி., பதவியில் இருந்து ஹேமந்த் நிம்பால்கரை, நேற்று மாலை அரசு இடமாற்றம் செய்தது. முக்கியத்துவம் இல்லாத தகவல் தொடர்பு துறைக்கு, கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
அடுத்த நடவடிக்கையாக, முதல்வரின் அரசியல் செயலர் பதவியில் இருந்து, காங்கிரஸ் எம்.எல்.சி., கோவிந்தராஜும் நேற்று நீக்கப்பட்டார். கோவிந்தராஜ் கர்நாடக ஒலிம்பிக் சங்க தலைவராக உள்ளார். இவருக்கு ஆர்.சி.பி., நிர்வாகம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் உடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
போலீசாருக்கு இவர் கொடுத்த அழுத்தத்தால் தான், விதான் சவுதா, சின்னசாமி மைதானத்தில் ஒரே நாளில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.