Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு முதல்வருக்கு கோர்ட் நோட்டீஸ்

ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு முதல்வருக்கு கோர்ட் நோட்டீஸ்

ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு முதல்வருக்கு கோர்ட் நோட்டீஸ்

ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு முதல்வருக்கு கோர்ட் நோட்டீஸ்

ADDED : ஜூன் 19, 2025 11:29 PM


Google News
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் அமைப்புகளால், மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன என சட்டசபையில் கூறிய முதல்வர் சித்தராமையா மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நடப்பாண்டு மார்ச் 17ல் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் சித்தராமையா பேசும்போது, 'கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் அமைப்புகள் அதிகளவில் குற்றச் செயல்களை செய்கின்றன' என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்க்கட்சியான பா.ஜ., கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக, வக்கீல் கிரண், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், 'முதல்வர் சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மரியாதையை அவமதிக்கும் வகையில் பேசி, அவதுாறு பரப்பி உள்ளார். அவரின் பேச்சு சமூக வலைதளங்கள், யு டியூப்பில் வேகமாக பரவியது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, கலாசாரம், மத ரீதியிலான அமைப்பு. இந்த அமைப்பு எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதில்லை. முதல்வரின் பேச்சு, ஆர்.எஸ்.எஸ்., நன்மதிப்பை பாதித்துள்ளது.

'சட்டசபை நிகழ்வுகள் குறித்து, இதுவரை ஆர்.எஸ்.எஸ்., எந்த அறிக்கையும் வெளியிட்டதில்லை.

'ஆனால், முதல்வர் வேண்டுமென்றே, இந்த அமைப்பின் பெயரை சேர்த்து, குற்றப் பின்னணி உள்ளது என்று கூறி உள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us