ADDED : செப் 10, 2025 10:10 PM

சிக்கமகளூரு மாவட்டம், இயற்கை வளங்கள் நிறைந்துள்ள மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் ஒவ்வொரு இடமும், சுற்றுலா பயணியரை வசீகரிக்கின்றன. ஒன்றா, இரண்டா சொல்வதற்கு. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அற்புத அழகு கொண்டவை.
கர்நாடகாவின் வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டங்களில் சிக்கமகளூரும் ஒன்றாகும். அழகான நீர் வீழ்ச்சிகள், உயரமான மலைகள், புராதன கோவில்கள், கண்களை குளிர வைக்கும் பசுமையான காபி, தேயிலை தோட்டங்கள், ஆறுகள் நிறைந்து, பூலோக சொர்க்கமாக விளங்குகிறது.
இங்கு கொட்டி கிடக்கும் இயற்கை அழகை ரசிக்க, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். சிக்கமகளூரு தன் உடலில் மறைத்து வைத்துள்ள அழகான சுற்றுலா தலங்களில் சந்திர துரோண மலை, மிகவும் முக்கியமானது.
பிறை சந்திரன் வடிவில் அமைந்துள்ளதால், இம்மலை சந்திர துரோண மலை என, அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து, 1,930 அடிக்கும் அதிகமான உயரம் கொண்டதாகும். இது ஹிந்துக்களின் புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. மலையேற்றத்துக்கு தகுதியான இடமாகும். இளைஞர்கள், இளம் பெண்கள் மலையேற்றத்துக்கு வருகின்றனர். மலை உச்சியில் நின்று பார்த்தால், சுற்றிலும் பசுமையான காட்சி தென்படும்.
முல்லய்யனகிரி மற்றும் பாபாபுடன் கிரி மலைகளின் வரிசையில், சந்திர துரோண மலை அமைந்துள்ளது. இங்கு மூன்று குகைகள் உள்ளன. மலை உச்சிக்கு செல்ல விரும்பினால், அடர்ந்த வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டும். இது புதுமையான அனுபவமாக இருக்கும். வாகன சத்தமும், புகை மண்டலம் சூழ்ந்த பரபரப்பான வாழ்க்கையில் வெறுப்படைந்து, அமைதி, நிம்மதியை தேடுவோருக்கு, சந்திர துரோண மலை பெஸ்ட் சாய்ஸ்.
அமைதி சூழ்ந்த மலைப்பகுதியில் சிறிது நேரம் இருந்தால் மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள். இந்த அனுபவத்துக்காகவே, சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகம். சிக்கமகளூருக்கு வரும் பலரும், சந்திர துரோண மலைக்கும் சுற்றுலா வருகின்றனர்.
எப்படி செல்வது? பெங்களூரில் இருந்து, 242 கி.மீ., மைசூரில் இருந்து, 171 கி.மீ., மாண்டியாவில் இருந்து, 196 கி.மீ., தொலைவில், சிக்கமகளூரு உள்ளது. கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்து, சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், தனியார் பஸ்கள், வாடகை வாகனங்கள் வசதி உள்ளது. ரயில்களும் உள்ளன. சிக்கமகளூருக்கு சென்று, அங்கிருந்து சந்திர துரோண மலைக்கு செல்லலாம். இங்கு ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகளும் உள்ளன.
மலைக்கு செல்ல குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், அனுமதி பெற்ற பின் செல்ல வேண்டும். சுற்றுலா பயணியர் புக்கிங் செய்து கொள்ள http://chikkamagalure.nicin/enMtourism என்ற வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: முல்லய்யன கிரி, அப்பி நீர் வீழ்ச்சி, குதுரேமுக் தேசிய பூங்கா.
- நமது நிருபர் -