/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடக துணை முதல்வரை கண்டித்து பார்லிமென்டில் பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளி கர்நாடக துணை முதல்வரை கண்டித்து பார்லிமென்டில் பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளி
கர்நாடக துணை முதல்வரை கண்டித்து பார்லிமென்டில் பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளி
கர்நாடக துணை முதல்வரை கண்டித்து பார்லிமென்டில் பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளி
கர்நாடக துணை முதல்வரை கண்டித்து பார்லிமென்டில் பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளி
ADDED : மார் 25, 2025 02:22 AM
ராஜ்யசபாவில் நேற்று அலுவல்கள் துவங்கியதும், பா.ஜ., - எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர். அப்போது, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு பேசியதாவது:
காங்கிரசைச் சேர்ந்த மிக முக்கியமான பொறுப்பில் உள்ளவர், அதுவும் அரசியலமைப்பு சட்டப் பதவியில் உள்ள ஒருவர், அரசியலமைப்பு சட்டத்தை திருத்தப் போவதாகவும், அதன் வாயிலாக அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த பேச்சு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
வாக்குவாதம்
இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை காக்க வந்தவர்கள். அதற்காகத்தான் நாடு முழுதும் ஒற்றுமை யாத்திரையை நடத்தினோம். ஆனால் நீங்களோ, இந்தியாவை உடைப்பதற்கு விரும்புகிறீர்கள்,” என்றார்.
அதற்கு அமைச்சர் கிரண் ரிஜிஜு, “முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க போவதாக கூறுவதன் வாயிலாக அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை சீரழிக்கப் பார்க்கிறீர்கள்.
''உங்களுக்கு தைரியம் இருந்தால், இன்றைக்கே உங்களது கர்நாடக துணை முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்,” என்றார்.
அப்போது, சபை முன்னவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான நட்டா பேசியதாவது:
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இது, அம்பேத்கர் அளித்த அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு மிகவும் முரணானது.
கர்நாடகாவில், ஒப்பந்தங்களை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக மத அடிப்படையில் 4 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டது. இது போன்ற சட்டங்களையும், கொள்கைகளையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சபை ஒத்திவைப்பு
அப்போது, ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்படவே, சபையில் அமளி அதிகரித்தது. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபாவிலும், காலையில் கேள்வி நேரம் துவங்குவதற்கு முன்பாகவே, இதே பிரச்னை வெடித்தது. கர்நாடகாவில் முஸ்லிம் சமூகத்துக்கு பொது ஒப்பந்தங்கள் வழங்குவதில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் கூறியிருப்பதை கண்டித்து, பா.ஜ., - எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
ஆளுங்கட்சி எம்.பி.,க்களே சபையின் மையப்பகுதியை நோக்கி முன்னேறி வந்து குரல் எழுப்பி கூச்சலிட்டனர். இதற்கு பதிலடியாக, காங்கிரஸ் தரப்பிலிருந்தும் குரல்கள் கிளம்பவே, சபை ஒத்திவைக்கப்பட்டது.
மதியத்துக்கு மேல் ராஜ்யசபா மீண்டும் கூடியபோது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று, கர்நாடகா துணை முதல்வர் ஒருபோதும் கூறவில்லை.
''காரணம், அரசியலமைப்பு சட்டத்தை எப்போதுமே காத்து வந்துள்ள கட்சி காங்கிரஸ். இனியும் அதே வழியில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் காவலாளியாக காங்கிரஸ் செயல்படும்,” என்றார்.
இதையடுத்து அமளி அதிகமானதால், சபை ஒத்திவைக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -