/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்! பா.ஜ., தலைவர்களுக்கு சித்து 'அட்வைஸ்' மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்! பா.ஜ., தலைவர்களுக்கு சித்து 'அட்வைஸ்'
மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்! பா.ஜ., தலைவர்களுக்கு சித்து 'அட்வைஸ்'
மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்! பா.ஜ., தலைவர்களுக்கு சித்து 'அட்வைஸ்'
மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்! பா.ஜ., தலைவர்களுக்கு சித்து 'அட்வைஸ்'
ADDED : ஜூன் 18, 2025 10:58 PM

பெங்களூரு: ''கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த விவகாரத்தில், மனசாட்சிபடி நடந்து கொள்ளுங்கள்,'' என, பா.ஜ., தலைவர்களுக்கு, முதல்வர் சித்தராமையா 'அட்வைஸ்' செய்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சின்னசாமி மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 11 பேர் பலியானதற்கு என்னை ராஜினாமா செய்யுமாறு சொல்லும் கர்நாடக பா.ஜ., தலைவர்கள், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இதுபோன்று நடந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்த தலைவர்கள் பட்டியலை வெளியிடட்டும்.
கூட்ட நெரிசல் சம்பவத்தில், பொறுப்பான அரசு என்ன செய்யுமோ அதை செய்து வருகிறோம். மூத்த போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளோம். என் அரசியல் செயலரை நீக்கி உள்ளேன். இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கு பிறகும், அரசுக்கு எதிராக பா.ஜ., போராட்டம் நடத்துவதற்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.
கழுகுகள்
இறந்த உடல்கள் மீது அரசியல் செய்வது பா.ஜ.,வுக்கு புதிதல்ல. இறந்த உடல்களை தேடி கழுகுகள் போல வருவது, பா.ஜ.,வின் ரத்தத்தில் உள்ளது. இறந்தவர்கள் குடும்பத்தினர் மத்தியில் துயரம், வேதனை இருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால்தான் இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் எப்போதும் அரசியலுக்கு பயன்படுத்தியது இல்லை.
குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த படுகொலையில், அனைத்து மதங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரை பறிகொடுத்தனர். அந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, பிரதமராக இருந்த வாஜ்பாய் அறிவுறுத்திய போதும், அவர் ராஜினாமா செய்யவில்லை. அந்த சம்பவத்திற்கு இதுவரை வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
சவுக்கடி
பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பஹல்காமில் நடத்தப்பட்ட படுகொலையில் 26 பேர் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று, எங்கள் கட்சி கேட்கவில்லை. அப்பாவிகளை கொன்ற 4 பேரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. இது மத்திய அரசின் தோல்வி. இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?
கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூர் வன்முறையில் பற்றி எரிகிறது. அந்த மாநில பா.ஜ., முதல்வராக இருந்த பிரேன் சிங், உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடியால் தன் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இன்னும் வன்முறை தொடர்கிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பு ஏற்க வேண்டும்.
குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்து 140 பேர் இறந்தனர். கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் 30 பேர் இறந்தனர். அந்த இரு மாநிலத்தில் பா.ஜ., அரசு நடக்கிறது. இரு மாநில முதல்வர்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை? இதுபோன்ற சூழ்நிலையில் என்னை ராஜினாமா செய்யுமாறு சொல்வதற்கு என்ன நியாயம் உள்ளது? போராட்டம் நடத்துவது போன்ற தெரு நாடகங்களை கைவிட்டுவிட்டு, பா.ஜ., தலைவர்கள் மனசாட்சிபடி செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.