Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தலைமை செயலர் பற்றி அவதுாறு கொறடா ரவிகுமாரை கைது செய்ய தடை

தலைமை செயலர் பற்றி அவதுாறு கொறடா ரவிகுமாரை கைது செய்ய தடை

தலைமை செயலர் பற்றி அவதுாறு கொறடா ரவிகுமாரை கைது செய்ய தடை

தலைமை செயலர் பற்றி அவதுாறு கொறடா ரவிகுமாரை கைது செய்ய தடை

ADDED : ஜூலை 04, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: தலைமை செயலர் ஷாலினி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துத் தெரிவித்த வழக்கில், மேல்சபை பா.ஜ., கொறடா ரவிகுமாரை 8ம் தேதி வரை கைது செய்ய, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கர்நாடக தலைமை செயலர் ஷாலினி குறித்து, மேல்சபை பா.ஜ., கொறடா ரவிகுமார் ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஜே.பி., நகரில் வசிக்கும் நந்ததீபா மகிளா சங்க தலைவர் நாகரத்னா அளித்த புகாரில், ரவிகுமார் மீது விதான் சவுதா போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நேற்று காலை ரவிகுமார் மனுத்தாக்கல் செய்தார்.

அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும், ரவிகுமார் தரப்பு வக்கீல் அருண் ஷியாம், நீதிபதி கிருஷ்ணகுமாரிடம் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நேற்று மாலை மனு மீது விசாரணை நடத்தினார்.

இழிவாக பேசுவது


ரவிகுமார் தரப்பு வக்கீல் அருண் ஷியாம் வாதிடுகையில், ''மனுதாரர் மீது பதிவான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. புகார் அளித்தவர் மின்னணு ஊடகங்களை பார்த்து புகார் கொடுத்ததாக கூறி உள்ளார். மனுதாரர் கூறிய வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

இதற்கு அரசு தரப்பு வக்கீல் பெல்லியப்பா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாதிடுகையில், ''இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் தலைமை செயலர். ஊடக அறிக்கையை நாங்கள் வாங்குவோம். யார் வேண்டும் என்றாலும் புகார் அளிக்கலாம். பெண்களை இழிவாக பேசுவது மனுதாரருக்கு வாடிக்கையாகி உள்ளது. கலபுரகி கலெக்டரை பாகிஸ்தானில் இருந்து வந்தவர் என்று விமர்சித்து இருந்தார். அவரது அறிக்கைகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளன,'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், ''அரசியல்வாதிகள் பயன்படுத்தும் மொழி, தரம்தாழ்ந்து சென்றுவிட்டது,'' என அதிருப்தியை வெளிப்படுத்தினார். ''விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும். மனு மீதான அடுத்த விசாரணையை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை மனுதாரரை கைது செய்ய கூடாது,'' என நீதிபதி தடை விதித்தார்.

ஆணவம் அதிகரிப்பு

ரவிகுமாருக்கு ஆணவம் அதிகரித்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சித்தராமையா,

முதல்வர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us