/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறை இடமாற்றம் செய்ய கோர்ட் மறுப்பு; விஷம் கேட்டு நடிகர் தர்ஷன் கண்ணீர் சிறை இடமாற்றம் செய்ய கோர்ட் மறுப்பு; விஷம் கேட்டு நடிகர் தர்ஷன் கண்ணீர்
சிறை இடமாற்றம் செய்ய கோர்ட் மறுப்பு; விஷம் கேட்டு நடிகர் தர்ஷன் கண்ணீர்
சிறை இடமாற்றம் செய்ய கோர்ட் மறுப்பு; விஷம் கேட்டு நடிகர் தர்ஷன் கண்ணீர்
சிறை இடமாற்றம் செய்ய கோர்ட் மறுப்பு; விஷம் கேட்டு நடிகர் தர்ஷன் கண்ணீர்
ADDED : செப் 10, 2025 01:46 AM

பெங்களூரு : சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் தொடர்புடைய நடிகர் தர்ஷன் உட்பட ஏழு பேரை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் இருந்து மாநிலத்தின் வேறு சிறைகளுக்கு மாற்ற கோரிய மனுவை, 64வது செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட ஏழு பேரின் ஜாமினை, கடந்த 14ம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஏழு பேரும் அன்றே கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை, மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றக்கோரிய மனுவும், சிறைச்சாலையில் கூடுதல் வசதிகள் செய்து தரக்கோரி தர்ஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், 64வது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நாயக் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இம்மனுக்கள் மீதான விவாதம் நிறைவு பெற்று நேற்று தீர்ப்பு அறிவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பெங்களூரு சிறையில் இருந்தபடி தர்ஷன் உட்பட ஏழு பேரும் நேற்று காலை காணொளிக்காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, தர்ஷன், நீதிபதியிடம் தனக்கு ஒரு கோரிக்கை இருப்பதாக கூறினார். என்ன என்று நீதிபதி கேட்டபோது, கண்ணீருடன், ''நான் சூரியனை பார்த்து 30 நாட்களாகின்றன.
' 'தலையணை, போர்வைகள் நாற்றம் அடிக்கின்றன. என் கைகள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கு என்னால் வாழ முடியவில்லை. எனக்கு விஷம் கொடுக்க உத்தரவிடுங்கள்,'' என்றார்.
நீதிபதி, ''இப்படி எல்லாம் பேசக்கூடாது. சிறை அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் உத்தரவிடுவோம். உங்களின் கோரிக்கை தொடர்பான, மதியம் உத்தரவு பிறப்பிப்போம்,'' என கூறி, ஒத்திவைத்தார். மீண்டும் மதியம் நீதிமன்றம் கூடியபோது, நீதிபதி நாயக் கூறியதாவது:
தர்ஷன் உட்பட ஏழு பேரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து, மாநிலத்தின் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
சிறை விதிகளின்படி படுக்கை, தலையணை வழங்க வேண்டும். சிறைக்கு வெளியே நடமாட தர்ஷனை அனுமதிக்க வேண்டும்.
அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால், சிறையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவரை சந்திக்கலாம். சிறையில் உள்ள கடைகளில், தன் சொந்த பணத்தில் சிற்றுண்டி, உணவுகளை வாங்கிக் கொள்ளலாம்.
கைதிகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் செய்துதர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.