ADDED : ஜூன் 19, 2025 11:31 PM
சாம்ராஜ் நகர்:சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் தெஷிபுரா காலனியை சேர்ந்தவர் புட்டம்மா, 45. நேற்று காலையில் பண்டிப்பூர் புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட ஓம்காரா வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றிருந்தார்.
மதிய நேரமாகியும், புட்டம்மா வராததால் குடும்பத்தினர், கிராமத்தினர் அவரை தேடி வனப்பகுதிக்கு சென்றனர்.
வனப்பகுதியில் ரத்தக்கறை படிந்த புட்டம்மாவின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கழுத்து, மார்பு, வயிற்று பகுதியில் புலி தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்தன. வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த போலீசார், உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பண்டிப்பூர் முதன்மை வன அதிகாரி பிரபாகர் கூறுகையில், ''புலி தாக்குதலில் பெண் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின், நடவடிக்கை எடுக்கப்படும். புலியை பிடிக்கும் பணி துவங்கப்படும்,'' என்றார்.
சாம்ராஜ்நகரின் பேடகள்ளியில், ஜூன் 10ல் இயற்கை உபாதைக்காக சென்ற பெண்ணை, புலி தாக்கிக் கொன்றதும், இப்புலியை, இரண்டு மணி நேரத்தில் வனத்துறையினர் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
பத்து நாட்களுக்குள், புலி தாக்கி இரண்டு பெண்கள் பலியானதால், கிராமத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.


