Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியை

மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியை

மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியை

மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியை

ADDED : ஜூன் 08, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
பெங்களூரில் வசித்து வருபவர் சாய்தேவி சஞ்சீவிராஜா. இவர் தமிழகம் ஸ்ரீவில்லிபுத்துாரை பூர்விகமாக கொண்டவர். இவர் தன் சிறுவயதில், ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில் சரணாலயம் பகுதியில் நாட்களை செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது, பெரும்பாலும், மயில், பறவைகள், மரம், செடி, கொடிகளுடன் நேரத்தை செலவிட்டு வந்தார். இதனால் இவருக்கு இயற்கை மீதும், வன விலங்குகள் மீதும் நாட்டம் ஏற்பட்டது. இது காலப்போக்கில் இயற்கை மீது காதலாக மாறியது.

துவக்கம்


தன் கல்லுாரி படிப்பிற்காக கோவைக்கு சென்றார். அங்கு நிதி மற்றும் வணிகம் தொடர்பான பாடத்தில் பட்டம் பெற்றார். ஆனால், இவருக்கு இயற்கை குறித்து படிக்க வேண்டும் என்ற ஆசை துவக்கத்தில் இருந்தே இருந்தது. இதற்கான, ஒரு வாய்ப்பாக பெங்களூரில் யானை வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்வது குறித்து வேலை இருப்பதாக அறிந்து கொண்டார்.

இதற்காக, பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அந்த வேலையையும் பெற்றார். பின்னர், பெங்களூரில் உள்ள குழந்தைகளையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் உற்றுநோக்கினார். அப்போது, குழந்தைகளுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள துாரத்தை அறிந்து கொண்டார். இதை பார்த்து, மனம் உடைந்து போனார். இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் என யோசித்தார்.

சிறப்பு வகுப்பு


அப்போது, அவர் குழந்தைகளுக்கு இயற்கை குறித்து ஜாலியான முறையில், சிறப்பு வகுப்பு எடுப்பதற்கான முயற்சியில் இறங்கினார். இதற்காக, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்தார். 2020ம் ஆண்டு, கொரோனோவிற்கு முன்பு, கப்பன் பூங்காவில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

அதற்கு ஏழு குழந்தைகள் மட்டுமே வந்திருந்தனர். குறைந்த அளவு குழந்தைகள் வந்தாலும், அவர்களுக்கு இயற்கை குறித்து பாடம் எடுத்தார். அதுமட்டுமின்றி, அவர்களை கேள்வி கேட்க வைத்தார். அவர்களின் கேள்விகளுக்கு பதில்களையும் கூறினார். வழக்கமாக பள்ளியில் பதில் சொல்லி பழக்கப்பட்ட மாணவர்களுக்கு, முதல் முறையாக கேள்வி கேட்பது மிகவும் பிடித்திருந்தது.

சந்தோஷம்


எனவே, அவரது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் சிறப்பான கருத்துகளை கூறியிருந்தனர். இதை கேட்ட பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். இதை பார்த்த சாய்தேவி சந்தோஷத்தில் விண்ணில் பறந்தார். தன் வகுப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைத்தார். அப்போது, கொரோனோ தொற்று வந்ததால், அவரால் அதை செய்ய முடியவில்லை.

எனவே, ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க துவங்கினார். இந்த கஷ்டமான கால கட்டங்களை தாண்டிய பின், 2023ல் 'திக்கேட் டெல்ஸ்' எனும் இயற்கை சார்ந்த விஷயங்களை, மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாத வகையில் கற்றுக் கொடுக்கும் அமைப்பை துவங்கினார்.

நோக்கம்


இதன் முக்கிய நோக்கமே மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாத வகையில் இயற்கை குறித்து பாடம் கற்பிப்பது மற்றும் மாணவர்களை கேள்வி கேட்க வைப்பது. சிறிய அளவிலான பள்ளிகளில் தொடர்பு கொண்டு, தன் திட்டத்தை பற்றி எடுத்துரைத்தார்.

இதையடுத்து, படிப்படியாக பள்ளிகளில் ஒப்பந்தகங்களை பெற்றார். இதன் மூலம், மாணவர்கள் வாரம் ஒரு முறை, பள்ளி மைதானம் அல்லது பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு இயற்கை குறித்து, விலங்குகள், பூச்சிகள் குறித்தும் பாடம் எடுப்பார்.

வகுப்பறையை தாண்டி வெளியில் பாடம் எடுப்பதாலும், மாணவர்களை கேள்வி கேட்க விடுவதாலும், அவர்களுடன் சந்தோஷமாக இருப்பதாலும் மாணவர்கள் உற்சாகமாக பாடங்களை கற்றுக் கொண்டனர். இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதனால், தற்போது 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இவரது குழுவில் உயிரியல் ஆசிரியர்கள் இருவர் உள்ளனர். தற்போது, இவரது கற்பிக்கும் திறனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மாணவர்கள் பலரின் விரும்பத்தக்க ஆசிரியையாக மாறி உள்ளார். இதை நினைத்து அனுதினமும் மகிழ்கிறார் சாய்தேவி.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us