Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஹெப்பாலை போக்குவரத்து மையமாக்க பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டம்

ஹெப்பாலை போக்குவரத்து மையமாக்க பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டம்

ஹெப்பாலை போக்குவரத்து மையமாக்க பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டம்

ஹெப்பாலை போக்குவரத்து மையமாக்க பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டம்

ADDED : ஜூலை 27, 2024 05:04 AM


Google News
பெங்களூரு : ரயில், மெட்ரோ ரயில், பி.எம்.டி.சி., பஸ்கள், புறநகர் ரயில் கடந்து செல்லும் ஹெப்பாலில், 'போக்குவரத்து மையம்' கட்ட, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 45 ஏக்கர் நிலம் வழங்கும்படி, வர்த்தகம் மற்றும் தொழில் துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு பெங்களூரு மெட்ரோ நிறுவனம் எழுதிய கடிதம்:

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் - சென்ட்ரல் சில்க் போர்டு இடையே, இணைப்பு ஏற்படுத்தும் மெட்ரோ நீலநிற பாதை, ஹெப்பால் வழியாக செல்கிறது. பணிகள் மும்முரமாக நடக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும்.

ஜெ.பி.நகரில் இருந்து கெம்பாபுரா வரையிலான 'மெட்ரோ ஆரஞ்ச்' பாதைக்கு அனுமதி கிடைக்கும் கட்டத்தில் உள்ளது.

இந்த பாதையும், ஹெப்பால் மூலமாகவே செல்லும். ஹெப்பால் - சர்ஜாபூர் இடையிலான சிவப்பு பாதைக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாராகிறது.

ஹெப்பாலை தவிர மற்ற எந்த இடங்களிலும், இது போன்று மூன்று மெட்ரோ பாதைகள், ஒரே இடத்தில் சந்திப்பது இல்லை. இதன் பக்கத்திலேயே பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தின் இரண்டாவது காரிடார் சிக்கபானவாரா - பென்னிகானஹள்ளி பாதையும் கடந்து செல்லும். இதன் பணிகளும் நடக்கின்றன.

ஹெப்பால் ரயில் நிலையமும் அருகிலேயே உள்ளது. பெங்களூரின் முக்கியமான போக்குவரத்து சாதனங்களில் ஒன்றான பி.எம்.டி.சி., டிப்போவும் ஹெப்பாலில் உள்ளது.

அனைத்து விதமான போக்குவரத்து வசதிகள் கொண்டுள்ள ஹெப்பாலை, பெங்களூரின் போக்குவரத்து மையமாக மேம்படுத்த, அடிப்படை வசதிகள் அவசியம். இங்கு கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் 55 ஏக்கர் நிலம் உள்ளது.

இதற்கு முன் இந்த இடத்தில் வேறு ஒரு திட்டத்தை செயல்படுத்த, கே.ஐ.ஏ.டி.பி., முன் வந்தும், செயல்படுத்த முடியவில்லை.

எனவே, 45 ஏக்கர் நிலத்தை மெட்ரோ நிறுவனத்திடம் வழங்கினால், போக்குவரத்து மையம் கட்டப்படும்.

மெட்ரோ நீலநிற பாதை அமைக்க, நிலம் தேவைப்பட்ட போது, கே.ஐ.ஏ.டி.பி., க்கு 12 கோடி ரூபாய் கொடுத்து, நிலம் வாங்கப்பட்டது. இப்போது 45 ஏக்கர் நிலத்துக்கு, 540 கோடி ரூபாய் வழங்க, மெட்ரோ நிறுவனம் தயாராக உள்ளது.

அதிக வாகன நெரிசல் உள்ள பகுதிகளில், ஹெப்பாலும் ஒன்றாகும். தேவனஹள்ளியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு செல்வோருக்கு, வாகன நெரிசலே பெரும் பிரச்னையாக உள்ளது. இங்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கினால், பயணியருக்கு உதவியாக இருக்கும்.

ஒரே இடத்தில் அனைத்து போக்குவரத்து வசதிகளும் இருந்தாலும், அடிப்படை வசதிகள் இல்லாவிட்டால், போக்குவரத்து வசதியால் பயன் இல்லை. இதற்காக பார்க்கிங் உட்பட மற்ற அடிப்படை வசதிகள் செய்ய, நிலம் தேவைப்படும். நிலம் வழங்கினால் பணிகளை துவக்குவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us