Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/கறவை மாடுகளில் மலட்டுத்தன்மையா

கறவை மாடுகளில் மலட்டுத்தன்மையா

கறவை மாடுகளில் மலட்டுத்தன்மையா

கறவை மாடுகளில் மலட்டுத்தன்மையா

PUBLISHED ON : ஜன 03, 2024


Google News
Latest Tamil News
கறவை மாடுகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம் இருந்தாலும் நான்கில் ஒரு பங்கு மாடுகளே இனப்பெருக்கத் தன்மையுடையவை.ஆண்டுக்கு ஒரு கன்று என்ற முறையில் பசுக்கள் ஈன்றால் மட்டுமே பால்பண்ணைத் தொழிலில் லாபம் சாத்தியம். இல்லாவிட்டால் பால்பண்ணைத் தொழிலில் பொருளாதார இழப்பு ஏற்படும்.

தற்காலிக மலட்டுத்தன்மை

பெரும்பாலான பசுக்கள் தற்காலிக மலட்டுத்தன்மையால் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. மூன்று முறை சரியான முறையில் சரியான பருவத்தில் கருவூட்டல் செய்தும் சினை பிடிக்காமல் இருப்பதே தற்காலிக மலட்டுத்தன்மை. சினைப்பருவத்தை காணத்தவறுவதே முதல் காரணம். பசுக்களில் 18 மணி நேரமும் எருமைகளில் 16 லிருந்து 24 மணி நேரமும் சினைப்பருவம் காணப்படும். இந்த நேரத்தில் பசுக்கள் அடிக்கடி கத்தும்; மற்ற பசுக்களின் மேல் தாண்டும். மற்ற பசுக்களை தன் மீது தாண்டவும் அனுமதிக்கும். தீவனம் உண்ணும் அளவு, பாலின் அளவு குறையும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். பிறப்புறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற திரவம் வழியும்.

தினமும் பால் கறக்கும் போது அல்லது கறந்த பின் காலை, மாலை வேளையில் இதை கவனிக்க வேண்டும். சில சமயம் எந்தவித அறிகுறியும் வெளியே காட்டாது. அப்போது கால்நடை டாக்டரை அழைத்து பரிசோதிக்க வேண்டும். உரிய நேரத்தில் கவனிக்காமல் பருவம் கடந்த பின் சினை ஊசி செலுத்துவதால் பலன் கிடையாது. காலையில் சினைக்கு வந்தால் அதே நாள் மாலையிலும், மாலையில் பருவத்திற்கு வந்தால் அடுத்த நாள் காலையிலும் சினை ஊசி செலுத்தினால் எளிதாகிவிடும்.

சோர்வை தவிர்க்க வேண்டும்

சினைப்பிடிப்புக்காக அதிக துாரம் நடத்தி செல்வதையும் அடிப்பதையும் தவிர்க்க வேண்டும். பசுவிற்கு ஓய்வு அவசியம். பசுக்களைக் கீழே படுக்க விடாமலும் தீவனம் தராமலும் ஒருநாள் முழுக்கக் கட்டி வைத்தால் சினைபிடிக்காமல் போகலாம். எப்போதும் போல சத்தான உணவுகளை தர வேண்டும்.

அதிக வெப்பம் அல்லது அதிக குளிர் தாக்கும் பொது பசுவின் இனவிருத்தித் திறன் பாதிக்கப்படுவதால் காலை அல்லது மாலை நேரத்தில் சினை ஊசி செலுத்த வேண்டும். வெயில் அதிகமாக இருந்தால் அவற்றை குளிக்க வைத்த பின் தயார் செய்ய வேண்டும்.

தீவனம் மற்றும் சத்து பற்றாக்குறைவு

பால் கறக்காத, சினையில் இல்லாத மாடுகளுக்கு காய்ந்த வைக்கோல் மட்டுமே தருவதால் எந்த விதமான சத்துக்களும் கிடைக்காமல் மலட்டுத்தன்மை ஏற்படும். புரதச்சத்து, தாதுஉப்புகள் சரியான அளவில் தீவனத்தில் இருக்க வேண்டும். தினமும் 15 முதல் 20 கிலோ பசுந்தீவனம், 1.5 கிலோ கலப்பு தீவனம் தர வேண்டும். பால் கறக்கும் மாடுகளாக இருந்தால் ஒவ்வொரு 3 லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ, சினைமாடாக இருந்தால் ஒரு மாட்டிற்கு 2 கிலோ கலப்பு தீவனம் தர வேண்டும். காய்ந்த தீவனமான கடலைக்கொடி, வைக்கோபை தினமும் 4 முதல் 5 கிலோ அளவும், ஒரு பசுவுக்கு தினமும் 30 கிராம் வீதம் தாது உப்புக் கலவை கலந்து தர வேண்டும்.

இனப்பெருக்க உறுப்புகளை தாக்கும் நோய்கள்

நோயுற்ற பொலிகாளைகள் மூலம் சினைப்படுத்தினால் பசுவின் கர்ப்பப்பையில் நோய் ஏற்பட்டு சீழ் வடியும். கன்று ஈனும் போது கொட்டகை சுகாதாரமாக இல்லாவிட்டாலோ, நஞ்சுக்கொடி விழாமல் இருந்து சுகாதாரமற்ற முறையில் வெளியே எடுப்பதாலோ கர்ப்பப்பையில் புண் ஏற்படுகிறது. இதனால் பால் உற்பத்தி குறைந்து சீழ் வடியும். இதற்கு மருத்துவ சிகிச்சை அளித்த பின் ஊசி மூலம் சினைப்படுத்த வேண்டும்.

கனநீர் பற்றக்குறை

லுாட்டினைசிங் ஹார்மோன் சுரக்கும் அளவு குறையும் போது வளர்ச்சியடைந்த கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவர முடியாமல் கட்டியாக மாறுகிறது. இதனால் பசுக்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை அல்லது சினைக்கு வராமலே இருக்கும். சில பசுக்களில் கருவுற்றபின் அக்கருவை கருப்பையில் வைத்து உரிய முறையில் பாதுகாக்க தேவையான 'புரோஜெஸ்டிரான்' சுரப்பி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு கருக்கலைந்து விடும். கால்நடை டாக்டர் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். வளர்ச்சி குன்றிய கிடேரிகளை இனவிருத்தி செய்வதால் கன்று ஈனும் காலத்தில் பிரசவிப்பது கடினமாகி மலட்டுத்தன்மை அடைகிறது. உரிய பருவத்திற்கு வந்துள்ளதா என்பதை டாக்டரிடம் கேட்டு ஆலோசனை பெற வேண்டும்.

நிரந்தர மலட்டுத்தன்மை

இனப்பெருக்க உறுப்பு கோளாறு, இரட்டை கன்றாக ஆண் கன்றுடன் பிறந்த பெண் கன்றின் இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்படைவது போன்றவற்றால் நிரந்தர மலட்டுத்தன்மை ஏற்படும். இதை சிகிச்சை கிடையாது. உரிய தீவனம் அளித்து சினைப்பருவ அறிகுறிகளை கண்டறிந்து பராமரித்தால் பால்பண்ணைத் தொழிலில் நிரந்தர லாபம் கிட்டும்.

- உமாராணி, பேராசிரியர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம் திருப்பரங்குன்றம், மதுரை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us