Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/ஆடியில் நடவு செஞ்சா ஐப்பசியில் அறுவடை

ஆடியில் நடவு செஞ்சா ஐப்பசியில் அறுவடை

ஆடியில் நடவு செஞ்சா ஐப்பசியில் அறுவடை

ஆடியில் நடவு செஞ்சா ஐப்பசியில் அறுவடை

PUBLISHED ON : ஜூலை 10, 2024


Google News
Latest Tamil News
ஆடிப்பெருக்கு தினத்தில் காய்கறி விதைகளை விதைப்பது விவசாயிகளின் பாரம்பரிய பழக்கம்.

விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டு வரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும் போது புது விளைச்சலுக்கு உதவும். காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

தேசிய தோட்டக்கலை வாரிய புள்ளி விவர படி 10 மில்லியன் எக்டேர் நிலப்பரப்பில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. ஆடி மாதத்தில் விதைகளை விதைக்கும் போது விவசாயிகள் சரியான தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் மகசூல் அதிகரித்து இரட்டிப்பாகும்.

விதை நேர்த்தி முறைகள்

காய்கறி விதைகளை 10 சதவீத மாட்டுக் கோமியத்தில் (100 மில்லி கோமியம், 900 மில்லி தண்ணீர்) ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து விதைத்தால் விதைகளின் முளைப்புத்திறன் கூடும். விதைகள் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைத்தால் விதைகளின் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும்.

நாற்றங்கால் பராமரிப்பு

சுரை, பீர்க்கு, புடலை, பாகல், பூசணி கொடி வகை விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தபின் விதைத்தால் விரைவில் முளைக்கும். கத்தரி, தக்காளி, மிளகாய் பயிர்களுக்கு உயர் பாத்தி நாற்றங்கால் அவசியம். பாசன, வடிகால் வசதி மரத்தடி அல்லது நிழல் வலை தேவை.

நிலப்பரப்பிலிருந்து 15 முதல் 20 செ.மீ உயரம், ஒரு மீட்டர் அகலத்தில் பாத்தி அமைக்க வேண்டும். பாத்தியின் மேல் செம்மண், மணல், மட்கிய தொழுவுரத்தை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து 25 முதல் 35 நாள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும் .

செடிகளுக்கிடையே சூரிய ஒளி நன்றாக படும் போது களை மற்றும் பூச்சி நோய்த் தாக்குதல் கட்டுப்படும். எனவே பயிர்களுக்கு இடையே இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

வெண்டை பயிர்களில் வரிசைக்கு வரிசை 45 செ.மீ., இடைவெளியும் செடிக்கு செடி 30 செ.மீ., இடைவெளி விட வேண்டும். கத்தரி வீரிய ரகத்தில் 60க்கு 90 செ.மீ., வரிசை இடைவெளி, 60 செ.மீ., செடிக்கு இடைவெளி தேவை.

மிளகாய் வீரிய ஒட்டு ரகத்தில் 60 க்கு 75 செ.மீ., வரிசை இடைவெளி, 45க்கு 60 செடி இடைவெளியும் தக்காளி வீரிய ஒட்டுரகத்தில் 45க்கு 60 செ.மீ., வரிசை இடைவெளி, 30க்கு 45 செ.மீ., பயிர் இடைவெளியும் கொத்தவரையில் 60 செ.மீ., வரிசை இடைவெளியும் 15 செ.மீ., செடி இடைவெளியும் விட வேண்டும். கொடி வகைப் பயிர்களில் குழிக்கு குழி 2 மீட்டர் இடைவெளி தேவை.

விதையளவைப் பொறுத்தவரை தக்காளி என்றால் ஏக்கருக்கு தக்காளி 160 முதல் 200 கிராம், தக்காளி வீரிய ஒட்டுக்கு 60 - 80 கிராம், கத்தரி 160 கிராம், வீரிய ஒட்டு கத்தரி 80 கிராம், மிளகாய் 200 கிராம், வீரிய ஒட்டு மிளகாய் 80 - 100 கிராம், வெண்டை 3.5 - 4 கிலோ, தட்டைப்பயறு 10 கிலோ தேவைப்படும்.

காய்கறி பயிர்களின் விதை விலை அதிகம் என்பதால் விதைப்பதற்கு முன் முளைப்புத்திறன் பரிசோதனை செய்ய வேண்டும். விதைகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். தரமான விதையாக இருந்தால் லாபமும் தரமாக இருக்கும்.

- மகாலெட்சுமிவிதைப் பரிசோதனை அலுவலர்- லயோலா அன்புக்கரசி வேளாண்மை அலுவலர் விதைப் பரிசோதனை நிலையம், சிவகங்கை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us