Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/நிலக்கடலையில் ஊட்டச்சத்து மேலாண்மை

நிலக்கடலையில் ஊட்டச்சத்து மேலாண்மை

நிலக்கடலையில் ஊட்டச்சத்து மேலாண்மை

நிலக்கடலையில் ஊட்டச்சத்து மேலாண்மை

PUBLISHED ON : ஜன 15, 2025


Google News
Latest Tamil News
இந்தியாவில் எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை முக்கியமான பயிர். தமிழகத்தில் நிலக்கடலை உற்பத்தித்திறன் ஒரு எக்டேருக்கு 950 கிலோ என்ற அளவில் உள்ளது. இது குறைவான விளைச்சல் தான். நிலக்கடலையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் அவசியம்.

மண் பரிசோதனை அவசியம்

மண் பரிசோதனை அடிப்படையில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை இடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால் மானாவாரி நிலத்திற்கு 10 : 10 : 45 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்து உரமிட வேண்டும். இறவைப் பகுதியில் 17 : 35 : 50 கிலோ அளவில் தழை, மணி, சாம்பல் சத்து உரங்களுடன் 60 கிலோ கந்தகக் கழிவை இடவேண்டும். வேளாண் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட 12.5 கிலோ நுண்ணுாட்ட சத்து கலவையுடன் உலர்ந்த மணலை சேர்த்து 50 கிலோ அளவில் விதை விதைத்தவுடன் மண் பரப்பில் துாவ வேண்டும். நுண்ணுாட்ட கலவையை மண்ணுடன் ஒன்றாக சேர்க்கக்கூடாது.

ஊட்டச்சத்து குறைபாடா

துத்தநாக சத்து குறைபாடாக இருந்தால் இலை நரம்பிற்கு இணையாக இலேசான மஞ்சள் நிறக்கோடுகள் இலையின் பரப்பில் தோன்றும். முதிர்ந்த நிலையில் பச்சைப் பற்றாக்குறை மற்றும் நுனி மொட்டு வளர்வது தடைபடும். எக்டேருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் நரம்புகளுக்கிடையே பச்சையக் குறைவு, நுனி மற்றும் வளர்ச்சி குறையும். ஒரு சதவீத இரும்பு சல்பேட் கரைசலை விதைத்த 30 மற்றும் 50வது நாட்களில் தெளிக்கவேண்டும்.

போரான் குறைபாடு எனில் இளம் இலைகளில் வளர்ச்சி தடைபட்டு குட்டையான புதர் அமைப்பை தரும். காய் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விதையில்லா காய்களாக மாறிவிடும். விதைத்த 45வது நாளில் 10 கிலோ போராக்ஸ், 200 கிலோ ஜிப்சத்தை இடவேண்டும்.

கந்தகக்குறைபாடு

குன்றிய வளர்ச்சி, ஒரே மாதிரி பச்சையக் குறைபாடுள்ள தாவரங்கள் சன்னமான தண்டு கந்தகக் குறைபாட்டின் அறிகுறிகள்.

ஜிப்சம் இட வேண்டும்

பாசனப் பயிராக இருந்தால் ஒரு எக்டேருக்கு 400 கிலோ ஜிப்சம் வீதம் 40--45வது நாளிலும், மானாவாரி பயிராக இருந்தால் 40-75வது நாளில் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இடவேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனைத் தரும். ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை ரசாயன உரங்களுடன் அடியுரமாகவும் மானாவாரி மற்றும் இறவைப் பயிரில் நுாற்புழுக்களால் ஏற்படும் 'காளஹஸ்தி மெலடி', நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப்புகளைக் குறைக்கமுடியும்.

ஊட்டச்சத்துகலவை தெளிப்பு

ஊட்டச்சத்து கலவை தயாரிக்க டி.ஏ.பி 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் ஒரு கிலோ, போராக்ஸ் (வெண்சுரம்) அரை கிலோ எடுத்து 37 லிட்டர் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலை இந்த கலவையை வடிகட்டினால் 32 லிட்டர் தெளிந்த ஊட்டச்சத்துநீர் கிடைக்கும். இதனை 468 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 25 மற்றும் 35ம் நாட்களில் தெளிக்கவேண்டும்.

நுண்ணுாட்டச் சத்துக்கள் வேண்டும்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையின் நுண் உரக்கலவை கிடைக்கும். எக்டேருக்கு 12.5 கிலோ அளவில் ஊட்டமேற்றிய தொழுவுரம் அளிக்க வேண்டும். இதற்கு 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை, தொழுவுரம் சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் நிழலில் உலர்த்த வேண்டும். விதைத்த உடனே இக்கலவையை அளிக்கவேண்டும். பூக்களை தக்க வைத்தல், நெற்று நிரப்புதல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்க விதைத்த 35ம் நாளில் (50 சதவீத பூக்கும் பருவம்) மற்றும் 45ம் நாளில் 'நிலக்கடலை ரிச்' எக்டேருக்கு 5 கிலோ அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.



-அருண்ராஜ், தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல் துறை)

மகேஸ்வரன், தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல் துறை)

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us