Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/தண்ணீரையும் தாங்கி வளரும் குதிரைவாலி

தண்ணீரையும் தாங்கி வளரும் குதிரைவாலி

தண்ணீரையும் தாங்கி வளரும் குதிரைவாலி

தண்ணீரையும் தாங்கி வளரும் குதிரைவாலி

PUBLISHED ON : பிப் 12, 2025


Google News
Latest Tamil News
குதிரைவாலி வறட்சியை தாங்கி வளர்வதால் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. அதேநேரத்தில் நீர் தேங்கும் நிலைகளை தாங்கும் திறன் கொண்டது.

இப்பயிர் உலகளவில் 1.46 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் 1.45 லட்சம் எக்டேர் இந்தியாவில் சாகுபடியாகிறது. 400 முதல் 500 மி.மீ., மழை போதுமானது. இந்தியாவில் உத்தரகாண்ட், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், தமிழகத்தில் அதிகளவு பயிரிடப்படுகிறது. மனிதர்களுக்கு உணவாகவும், ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.

மிக உயரமான கடல் மட்டத்திலிருந்து 2700 மீட்டர் உயரத்தில் கூட வளரும் தன்மை கொண்டது. நீர்ப்பாசன வசதியுடன் கூடிய நிலத்தில் நல்ல முறையில் களைகள் இன்றி பராமரித்து பூச்சி நோய் தாக்குதலின்றி விதைகள் உற்பத்தி செய்யலாம். சான்று பெற்ற அல்லது ஆதார விதைகளை வேளாண்மைத்துறை மூலம் வாங்கி உற்பத்தி செய்யலாம். தன் மகரந்தசேர்க்கை கொண்ட பயிர் என்பதால் போதிய இடைவெளி இருக்கவேண்டும். சான்று பெற்ற விதை மற்றும் ஆதார விதைகளுக்கு ரகத்திற்கு 3 மீட்டர் இடைவெளி விடவேண்டும்.

பருவங்களும் ரகங்களும்

குதிரைவாலி ஓரளவு வளமான மண்ணில் பயிரிடப்படுகிறது. தாழ்வான நிலங்கள் மற்றும் நீர் தேங்கி நிற்கும் மண்ணிலும் வளர்க்கலாம். காரிப் ( ஜூன், ஜூலை), ரபி (செப்., அக்.,), கோடை (ஜன., பிப்.,), பாசனப் பயிராக (பிப்., மார்ச்) பயிரிடப்படுகிறது. கோ 1, 1, கே 1, 2, மதுரை 1 , வி.எல்.மதிரா 181, டி.எச்.பி.எம். 93 - 3, சி.பி.ஒய்.எம்.வி.1 ரகங்கள் பயிரிட ஏற்றது. சராசரியாக 95 முதல் நுாறு நாட்கள் வயதுடையது.

ஜூலை முதல் 15 நாட்களில் பருவமழை தொடங்கும் போது விதைக்கலாம். எக்டேருக்கு 8 முதல் 10 கிலோ அளவில் விதைகளை 3 முதல் 4 செ.மீ., ஆழத்தில் விதைக்கலாம். சிலஇடங்களில் நாற்று நடவும் செய்யப்படுகிறது. வரிசைக்கு வரிசை 30 செ.மீ., இடைவெளியும், செடிக்கு செடி 10 செ.மீ., இடைவெளியும் தேவை.

உரம், நீர் மேலாண்மை

ஒரு எக்டேருக்கு 5 முதல் 10 டன் மட்கிய தொழுஉரம் இடவேண்டும். 40 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல்சத்து இடவேண்டும். விதைப்பு நேரத்தில் அனைத்து உரங்களையும் மண்ணில் சேர்க்கவேண்டும். நீர்ப்பாசன வசதிகள் இருந்தால் விதைத்த 25 முதல் 30 நாட்களுக்கு பிறகு தழைச்சத்தில் பாதியை பிரித்து இடலாம். பொதுவாக பாசனம் தேவையில்லை

என்றாலும் நீண்ட காலத்திற்கு வறண்ட காலநிலை ஏற்பட்டால் பூ பூக்கும் நேரத்தில் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். கனமழையின் போது அதிகப்படியான தண்ணீரை வயலில் இருந்து வெளியேற்றுவது எப்போதும் நல்லது.

நோய், களைக்கட்டுப்பாடு

விதைத்த 25 முதல் 30 நாட்கள் வரை வயலில் களைகள் இருக்கக்கூடாது. களைகளைக் கட்டுப்படுத்த இரண்டு களையெடுத்தல் போதுமானது. பூஞ்சைக்காளான் நோய் தாக்கினால் ஆரம்பத்தில் இலைகளில் வெளிர் மஞ்சள் பட்டைகள் தென்படும். பின் வெண்மையாக மாறி இலைகள் உலரும். சிலநேரங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழிக்க வேண்டும்.

நோய் பாதிக்கப்படாத செடிகளிலிருந்து மட்டுமே விதைகளை பயன்படுத்த வேண்டும். 'ஸ்மட்' என்பது விதை மூலம் பரவும் நோய். ஒரு கிலோ விதைக்கு 2.5 கிராம் என்ற விகிதத்தில் 'விட்டாவாக்ஸ்' அல்லது 'செரசன்' கொண்டு விதைநேர்த்தி செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வளர்ச்சி பருவத்தில் 'சைப்பர்மெத்திலின்' 0.2 சதவீத மருந்தை தெளிக்க வேண்டும். துரு என்பது இலைகளில் கரும்புள்ளிகள் கோடுகளாக காணப்படும். தானிய விளைச்சலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. தண்டு துளைப்பானைத் தடுக்க ஒரு எக்டேருக்கு 'தையமெத்தாக்சம்' லிட்டருக்கு 3 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்யலாம்.

பயிர் பழுத்தவுடன் சரியான நேரத்தில் அறுவடை செய்யவில்லை எனில் அறுவடையில் 10 சதவீத மகசூல் இழப்பு ஏற்படும். எக்டேருக்கு சராசரியாக 2300 முதல் 2650 கிலோ தானியம், 1200 கிலோ தீவனம் அல்லது வைக்கோல் அறுவடை செய்யலாம்.

-வாசுகி

விதை ஆய்வு துணை இயக்குநர், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை மதுரை, 80722 45412




      Our Apps Available On




      Dinamalar

      Follow us