Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: எல்லாரும் சமம் தான்!

விசேஷம் இது வித்தியாசம்: எல்லாரும் சமம் தான்!

விசேஷம் இது வித்தியாசம்: எல்லாரும் சமம் தான்!

விசேஷம் இது வித்தியாசம்: எல்லாரும் சமம் தான்!

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
மார்ச் 29 - சனிப்பெயர்ச்சி

திருக்கணித பஞ்சாங்க வாக்கியம், திருக்கணிதம் என, இருவகை பஞ்சாங்களில், கிரகப் பெயர்ச்சிகளின் காலம், மாறுபட்டு இருக்கும்.

இதைத் தவிர்க்க, மாநாடு ஒன்றைக் கூட்டிய காஞ்சி மகா பெரியவர், திருக்கணித பஞ்சாங்கத்தை மனிதர்களின் வாழ்வுக்கும், வாக்கிய பஞ்சாங்கத்தை கோவில்களில் நடக்கும் விழாவுக்குமாக பயன்படுத்திக் கொள்ளும்படி அருள் செய்தார்.

இவ்வாண்டு, திருக்கணிதப்படி, மார்ச் 29ம் தேதியும், வாக்கியப்படி, 2026 மார்ச் 7ம் தேதியும் சனிப்பெயர்ச்சி நடக்கிறது. திருநள்ளாறில், அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும். இம்முறை, கும்ப ராசியிலிருந்து, மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார், சனி.

சனி என்றாலே ஒருவித பயம் இருக்கிறது. அவர் படுத்துவது என்னவோ உண்மை தான். ஆனாலும், அது நன்மைக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சனியின் முன்னிலையில், எல்லாருமே சமம் தான்.

ஒருசமயம், உலக நன்மை கருதி, குழந்தை விநாயகரையே பாடாய் படுத்தி விட்டார், சனி. அப்போது தான் பிறந்திருந்தார், விநாயகர். தங்கள் பிள்ளையைப் பார்த்து மகிழ்ந்திருந்தனர், சிவ - பார்வதி. தேவர்கள் அங்கே கூடியிருந்தனர். ஆடல், பாடல் என, களை கட்டியிருந்தது, சிவலோகம்.

எல்லாரும் சென்றாலும், சனியால் மட்டும் அங்கு செல்ல முடியவில்லை. அவருக்கோ, குழந்தை விநாயகரைப் பார்க்க கொள்ளை ஆசை. ஆனால், தன் பார்வை படுவதை யாரும் விரும்ப மாட்டார்களே! என்ன செய்வது? தன் தாய் சாயாதேவியிடம் கேட்டார், சனி.

'மகனே! ஊரே அங்கு கூடி நிற்க, நீ மட்டும் போக முடியாமல் உள்ளதே என, எனக்கும் வருத்தம் தான். ஒன்று செய்! நீ அங்கு நடக்கும் கூத்துக்களை மட்டும் ஒளிந்து நின்று பார். குழந்தையைப் பார்த்து விடாதே...' என்றாள், சாயா.

சனீஸ்வரரும் சென்றார். எல்லாரும் தொட்டிலில் கிடந்த விநாயகரை தரிசித்தனர். சனிக்கு ஆர்வம் தாங்கவில்லை. இவரும் போய் பார்த்து விட்டார். பார்த்த மாத்திரத்தில், குழந்தையின் தலை போய் விட்டது. கதறினாள், பார்வதி. அவளுக்கு ஆறுதல் சொன்னார், சிவன்.

'பார்வதி! கஜமுகாசுரன் என்ற அசுரனைக் கொல்லவே, உன் மகன் பிறந்தான். அவன், யானை முகம் கொண்டவன். அவனோடு போராட, இவனுக்கும் யானை முகம் வேண்டும். இவனுக்கு அந்த முகத்தைக் கொடுக்கிறேன்...' என்ற சிவன், மகனுக்கு யானைத் தலை பொருத்த ஏற்பாடு செய்தார்.

இருப்பினும், பார்வதியின் கோபம் அடங்கவில்லை. சனியின் காலை முடமாக்கி விட்டாள். 'நீ, இனி மெதுவாகவே நடப்பாய். நீ வருவதற்குள் என் பக்தர்களை காத்து விடுவேன்...' என்றாள். சனியும் வருத்தத்துடன் வீடு திரும்பினார்.

இதையறிந்த சாயாதேவி, 'என் மகன் ஊனமானது போல், உன் மகன் விநாயகனும் லம்போதரன் - வயிறு பெருத்தவன் ஆகட்டும். வயிறு பெரிதான உன் மகனாலும் வேகமாக நடக்க முடியாது...' என, பதில் சாபமிட்டாள். இதனால் தான், விநாயகரின் அருள் கிடைக்க பக்தர்களுக்கு தாமதமாகும்.

அவரது அருளை விரைவில் பெற ஒரே வழி, 'ஓம் சக்தி விநாயக நமஹ' என்ற மந்திரத்தை தினமும் முடிந்த வரை சொல்வது தான்.

சனி பகவான் முன், எல்லாரும் சமம் தான். கடமை தவறாதவர்கள், கோபப்படாதவர்கள், நல்லதையே செய்பவர்களை, அவர் அணுக மாட்டார். இந்த நிபந்தனைகளைப் பின்பற்றினால், சனிப்பெயர்ச்சி நம்மை ஏதும் செய்யாது.

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us