பாருக்குள் நுழையும் முன், பூபதியை பிடித்துவிட வேண்டும் என, பைக்கில் பறந்துக் கொண்டிருந்த, சீனு, எப்படியோ அவனை பிடித்து விட்டான்.
''என்ன மச்சான்? என்னமோ உலக மகா உத்தமன் மாதிரி பேசுவ? இன்னைக்கு நீயும் சாராயக் கடைத் தேடி வந்திருக்கே,'' என, நக்கலாக சிரித்தான், பூபதி.
''நான் என்னைக்கும் உலக உத்தமன்தான்டா. நான், உன்னை மாதிரி குடிக்க வரலை.''
''பின்னே... பனைமரத்தடியில உட்கார்ந்து, பாதாம் அல்வா சாப்பிட வந்தியா?'' என, பெரிதாக சிரித்தவனிடம், ''இதப்பார். உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன். வா இப்படி,'' என, அவனை இழுத்து சென்றான்.
''டேய், என்ன விஷயமாய் இருந்தாலும், ஒரு, 'பெக்' ஏத்திக்கிட்டுத்தான் என்னால கேட்க முடியும். நீ குடிக்கலைன்னா பரவாயில்லை. இரு, நான் போய்ட்டு வர்றேன்,'' என, நகர முயன்றவனை, வலுக்கட்டாயமாக இழுத்து நடந்தான், சீனு.
''உன்னை இன்னைக்கு நான் குடிக்க விடப் போறதில்லை.''
''இந்தா சொல்ல வந்ததை சொல்லிப்புட்டு கிளம்பு. என்னை குடிக்க விடாம நீ எதுக்கு தடுக்கறே?'' எரிச்சலானான், பூபதி.
இருவரும் சற்று துாரத்தில் இருந்த, டீ கடை பக்கம் வந்தனர்.
''வா... டீ குடிச்சுக்கிட்டே பேசலாம். சூடா மசால் வடை கூட போட்டிருக்கான்,'' என, டீ கடையினுள் நுழைந்து, டீக்கும், மசால் வடைக்கும் சொல்லிவிட்டு அமர்ந்தான், சீனு.
''சொல்லு, என்னா விசயம்? டீ, மசால் வடை பார்ட்டியெல்லாம் தர்றே? ஆபிஸ்ல உனக்கு, பதவி உயர்வு எதுனா கிடைச்சுதா?''
''சொல்றேன். டீ வரட்டும்,'' என முறைத்தான், சீனு.
சுடசுட மசால் வடையும், டீயும் எடுத்து வந்து மேஜையில் வைத்தனர்.
''அதான் வந்துடுச்சே டீயும், வடையும் சொல்லு,'' என, வடையை எடுத்து கடித்தான், பூபதி.
''இப்படி சம்பாதிக்கற காசையெல்லாம் குடிச்சே அழிக்கிறியே. நேத்து, மாரியம்மா வீட்டுக்கு வந்தா. 'வீட்டுக்குள்ள வெளக்கமாத்தால அடிச்சாலும், சிலருக்கு வராத வெட்கம், ஊருக்குள்ள உதை வாங்கினா வரும். நான் சொல்லி திருந்தலை. நீங்களாவது சொல்லுங்கண்ணே. உங்க கூட படிச்சவர் தானே. உங்களை மாதிரியே குடும்பம் நடத்த வேணாமா? இப்படியே அவரு பண்ணிக்கிட்டு இருந்தாருண்ணா, நான் எங்கனாவது கண்காணாம போயிடுவேன்'னு, ஒரே ஒப்பாரி.
''இதப்பாரு பூபதி, நீ செய்யறது கொஞ்சமும் நல்லாயில்லை. இந்த குடிப்பழக்கத்தை வுட்டுபுட்டு மரியாதையா வூட்டை பாரு, புள்ளைங்களை பாரு,'' என, கடைசி வாய் டீயை ஆறிப் போயிருந்தாலும் மிச்சம் வைக்காது குடித்துவிட்டு, கிளாசை சத்தத்துடன் வைத்தான், சீனு.
''மச்சான், நான் ஏன் இப்படி குடிக்கிறேன்னு உனக்குத் தெரியாதா? மறக்க முடியலைடா. மறக்க முடியலை. மாலினியை என்னால மறக்க முடியலை.''
''மாலினியாம் மாலினி. மாலினியை மறக்க முடியாதவன் ஏன்டா, எவன் வூட்டு பொண்ணுக்கோ தாலி கட்டி அவ குடியை கெடுக்கற?''
''நீ என்ன சொன்னாலும், நான் குடிப்பேன். என்னால, மாலினியை மறக்க முடியலை. மறக்க முடியலை,'' மேஜையில் கவிழ்ந்து அழத் துவங்கினான், பூபதி.
குடிக்காமலேயே குடிகாரனைப் போல் குரலெடுத்து கத்தினான்.
'ஒரு சமயம் காலையிலேயே வேலைக்குப் போகாமல் குடித்திருப்பானோ? இப்பொழுது இரண்டாவது ரவுண்டுக்குத் தான் வந்திருப்பானோ?' என, பூபதியை டீ கடையிலிருந்து இழுத்து வருவதற்குள் சீனுவுக்கு பெரும்பாடாகியது.
''மாலினி, என் மாலினி. அவளை மறக்கத்தான் நான் குடிக்கறேன். உனக்கு என்ன தெரியும்? காதலோட அருமை. 'அந்த குட்டச்சியை, நீ கட்டிக்கலைன்னா. வெட்டிபுடுவேன்'னு, அஞ்சாங் க்ளாஸ் படிக்கும் போதே, அருவாளை சீவி வச்ச மாமனுக்கு பயந்து கெடந்த உனக்கு, காதலைப் பத்தி என்னடா தெரியும்?
''அந்த மாரியம்மாளுக்குத் தான், காதலைப் பத்தி என்னா தெரியும். படிப்பறிவில்லாத கழுதை. மாலினி மாதிரி, கவிதை எழுத தெரியுமா? எப்படி எழுதுவா என்னப் பத்தி? ராசாவே உன்னை நம்பி, இந்த ரோசாப்பூ இருக்குதுங்கன்னு, திருக்குறள் மாதிரி ரெண்டே வரியில எழுதுவாளே.''
சீனுவிற்கு சிரிப்பு மாளவில்லை. ஆனாலும், அவனை சாராயக்கடைக்கு போக விடாமல் தடுக்க முடியவில்லை. கட்டுத்தறியை அவிழ்த்துக் கொண்டு ஓடும் பூபதியை, சீனுவால் பிடிக்க முடியவில்லை.
'தொலையட்டும். மெல்ல மெல்லத்தான் இவனை திருத்தணும். திருத்திப்புடலாம்ன்னு மாரியம்மாளுக்கு சமாதானம் சொல்லிக்கலாம்...' என, நடந்தவன் மனதிலும், மாலினி வந்து நர்த்தனமாடத் தொடங்கினாள்.
எருக்கூரிலிருந்து சைக்கிள் மிதித்து போய், சீர்காழியில், ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தனர், சீனுவும், பூபதியும்.
சீர்காழியில் உள்ள எல்லா பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில், இவர்கள் படித்த பள்ளிக்கு, பெண்கள் பள்ளியிலிருந்து கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள வந்தவள் தான், மாலினி.
கையில் காகிதத்தை வைத்துக் கொண்டு, கால்கள் நடுங்க, குரல் பிசிறடிக்க, அவள் படித்த கவிதை இன்று ஞாபகம் இல்லை. ஆனால், சாகும் வரை அந்த கவிதை, தனக்கு ஞாபகம் இருக்கும் என, மார்தட்டிக் கொள்வான், பூபதி.
'சூப்பர்டா மச்சான். வருங்காலத்துல பெரிய அவ்வையாரா வருவாடா...' என, பூரித்து முழக்கமிட்டான்.
'என்னது அவ்வையாரா? ஏன்டா, கவிக்குயில் சரோஜினி நாயுடு அப்படி இப்படின்னு சொல்லேன்டா...'
'போடா. அவங்களெல்லாம் அவ்வையாரைவிட பெரிய ஆளா?' என, புளகாங்கிதம் கொண்டான், பூபதி. அதை அவளிடமே சென்று வளைந்து, நெளிந்து, குழைந்து, 'நீங்க வருங்காலத்துல பெரிய அவ்வையாரா வருவீங்க...' என உளறினான்.
வெடித்து சிரித்தாள், அவள். அந்த சிரிப்பில், அவன் விழுந்தான். கூடவே கையைப் பற்றிக் கொண்டு அவளும் அந்த குழியில் விழுந்தாள்.
பள்ளிக்கூட காதல், கல்லுாரியிலும் தொடர்ந்தது. ஏதோ ஒரு பத்திரிகையில் பிரசுரமான, அவளுடைய முதல் கவிதைக்கு கிடைத்த சன்மானத்தில் பார்ட்டி தர, அவள் அவனை அழைத்தாள். அவன், இவனையும் அழைத்து, ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றான். பார்ட்டி கொடுத்த நேரத்தில், அவர்களை ஒரு கிழவி பார்த்து வைத்தது.
பென்ஷன் பண விஷயமாக வந்த கிழவி, பென்ஷன் பணத்தை வாங்கிய பெருமிதத்தில் கணவருக்கு நன்றி சொல்லும் விதமாக, ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என வந்தது. அப்போது, கிழவியின் பூஞ்சையடைந்த கண்களில் பளிச்சென தெரிந்தனர், மூவரும்.
மானம் காக்கும் தமிழச்சியாக ஓடி, 'ஒருவரிடமும் சொல்லாமல் கண்டிச் சுவை...' என, மாலினியின் அப்பாவிடம் ஓதி, ஒப்பாரி வைத்துவிட்டு, ஊரெங்கும் பறை அறிவித்து தெரிவித்து விட்டது, கிழவி.
பெல்ட்டை கழட்டி மாலினியை விளாசிய அப்பா, புத்தக பையை துாக்கி மூலையில் வீசினார். அத்துடன் படிப்பு கோவிந்தா. அடுத்த முகூர்த்தத்திலேயே ஒருத்தனைப் பிடித்து கட்டி வைத்து, சென்னைக்கு ரயிலேற்றி விட்டார்.
இங்கே இவன் மொடாக் குடியனாகி விட்டான். முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கிறான்.
எருக்கூர் பஸ் ஸ்டாண்டில் பேருந்துக்கு காத்திருந்த, மாரியம்மாவைப் பார்த்ததும் நாலு வார்த்தை ஆறுதல் சொல்ல நினைத்து, அருகில் போனான், சீனு.
''ம்... அன்னைக்கு கண்டிச்சு வுட்டேன். திருந்திடறேன்னு சொன்னான். குடிக்காம வர்றான்ல?'' என, தன்னுடைய முயற்சி தோல்வியில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காக, இப்படி கேட்டு வைத்தான்.
''ம்க்கும்... உள்ளுரு சரக்கு சரியில்லைன்னு, சென்னைக்கு போயிருக்காரு. அங்க கேக்க யாரு இருக்கா? ப்ரீயா குடிக்கலாம், கூத்தடிக்கலாம்.''
''எதுக்கு சென்னை போயிருக்கான்?''
''என்னமோ வேலையாம். போயிருக்கு. நாலு நாலு கழிச்சுத்தான் வருமாம். வாயத் தொறந்தா பொய்யும், புனைசுருட்டும். என்னமோ போவட்டும், நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை,'' என்றாள், மாரியம்மா.
ஒரு வாரம் கழித்து, ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆட்டுக்கறி வாங்க பாய் கடைக்கு சென்றபோது, அங்கே, ''எனக்கு, அரை கிலோ கறி போடுப்பா,'' என, உத்தரவிட்டு, அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த, பூபதியைப் பார்த்து திகைத்து போனான், சீனு.
ஆளே மாறியிருந்தான். பளிச்சென்ற பேன்ட், சட்டை; சுத்தமாக ஷேவ் செய்த முகம்; நெற்றியில், மெல்லிய சந்தன கீற்று.
ஞாயிற்றுக்கிழமை என்றால், முழு நேரமும் பாரில் கிடக்கும், பூபதியா இது? பொறுப்பாக கறி எடுத்து போய் சமைத்து குடும்பத்துடன் சாப்பிட, பாய் கடைக்கு வந்திருக்கிறான். ஆச்சரியமாக அவனருகே அமர்ந்து, தோளைத் தட்டினான், சீனு.
''என்ன மச்சான் ஆளே மாறிட்டே. ஞாயித்துக்கிழமையானா நீ, இருக்கற எடமே வேற. அக்கறையா பொண்டாட்டி, புள்ளைக்கு கறி வாங்க வந்திருக்கே?'' என, கிண்டல் செய்தான், சீனு.
தலையை கவிழ்ந்துக் கொண்ட பூபதி, ''நான் குடிக்கறதை விட்டுட்டேன்,'' என்றான்.
ஆச்சரியமாக கண்களை விரித்தான், சீனு.
''என்னாது குடிக்கறதை விட்டுட்டியா... எப்படிடா? மாலினியை மறக்க முடியலைன்னு குடிச்சே? இப்ப எப்படி திடீர்னு, அவளை மறந்தே?''
''வேலை விஷயமா சென்னை போனப்ப, அவளை யதேச்சையா பார்த்தேன்.''
''அப்படியா, எப்படி இருக்கா? பாவம், அவ அப்பன் அவசரப்பட்டு அவளை எவனுக்கோ கட்டிக் கொடுத்துட்டாரு. நல்லா படிச்சு பெரிய ஆளா வர வேண்டிய பொண்ணு. கவிதையெல்லாம் எழுதுவா,'' என்றான், சீனு.
''ஆமா, அதுதான் என்னை கொன்னுக்கிட்டிருந்தது. நான், அவளை காதலிக்காம இருந்திருந்தா, அவ பாட்டுக்குப் படிச்சிருப்பா. பெரிய வேலைக்குப் போயிருப்பா. நல்லா வாழ்ந்திருப்பா.
''அவ காதலிக்கறாங்கற ஆத்திரத்துல, குடும்ப மானத்தை வாங்கிடுவாள்ன்னு, ஜாதி வெறி புடிச்ச அவ அப்பா, படிப்பை நிறுத்தி கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாரு. அவ கனவையெல்லாம் நான்தான் அழிச்சுட்டேன்னு, அவளை மறக்க முடியாம, பெரிய குற்ற உணர்வுல வுழுந்துட்டேன்.
''அவ எங்கயோ கஷ்டப்படறாள்ன்னு, என் மனசு என்னை குத்திக்கிட்டே இருந்தது. என்னால தான் அவ வாழ்க்கை வீணாயிடுச்சுன்னு அதிகமா குடிக்க ஆரம்பிச்சேன். ஆனா, அவளை ஒரு வக்கீலா பார்த்த போது, என்னால நம்பவே முடியலை.
''எப்படி இந்தளவுக்கு படிச்சாள்ன்னு பிரமிச்சுப் போனேன். அவ புருசன் ரொம்ப நல்லவராம். அவளுக்கு படிப்பு மேல இருந்த ஆர்வத்தை புரிஞ்சுக்கிட்டு, படிக்க வச்சாராம். நல்ல புருஷனா கிடைச்சதால, இந்தளவுக்கு நான் படிச்சு பெரிய ஆளா வர முடிஞ்சது.
''இதே சரியில்லாத புருஷனாய் இருந்தா, நான் வயசு கோளாறுல காதல், கீதல்ன்னு பண்ணி, என் படிப்பை கெடுத்துக்கிட்டதுக்கான தண்டனையை அனுபவிச்சுக்கிட்டு இருந்திருப்பேன்னு, அவ சொன்னப்ப, எனக்குள்ள இருந்த குற்ற உணர்வு போயிடுச்சி.
''அது மட்டுமில்லை. அது வெறும் வயசு கோளாறுன்னு புரிஞ்சுக்கிட்டு, தெளிவா வாழ்க்கையில அவ முன்னேறிக்கிட்டு இருக்கிறாள். நான், பழைய காதலை நினைச்சு உருகிக்கிட்டு, என் குடும்பத்தை உருக்குலைய வச்சிக்கிட்டு இருக்கிறதை நினைச்சு, கூனிக் குறுகிப் போயிட்டேன். அதான், குடிக்கு தலை முழுகிட்டு, என் குடும்பத்தை பார்க்க முடிவுப் பண்ணிட்டேன்,'' என்ற, பூபதியின் கண்கள், நீரால் நிறைந்திருந்தது.
ஆர். சுமதி