Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (4)

அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (4)

அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (4)

அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (4)

PUBLISHED ON : ஏப் 21, 2024


Google News
Latest Tamil News
ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் இணைந்து, திரைப்பட நிறுவனம் துவங்க முடிவெடுத்து, அதற்கு, 'லெட்சுமி பிக்சர்ஸ்' என்று பெயரிட்டனர்.

தங்களது, திரைப்பட நிறுவனத்தை, 'யூனிட்' அதாவது, திரைப்பட குழுவாக உருவாக்கினர். அதில், ஒலிப்பதிவாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், ஒப்பனையாளர், இயக்குனர், கதை வசனகர்த்தா என, அனைவரும் இருந்தனர். இதை திரையுலகில், ஏ.பி.என்., குழு - யூனிட் என்றே அழைத்தனர்.

திரைப்பட குழுவை உருவாக்கியதில், ஏ.பி.என்., ஆலோசனை தான் முக்கிய காரணம். பிற்காலத்தில் திரைப்படத் துறையினர் பலரும், இந்த முறையை பின்பற்றியது குறிப்பிடத்தக்கது. அந்த குழுவின் முதல் திரைப்படம், மக்களை பெற்ற மகராசி.

இப்படத்தில், கோவை மொழியில் பேசி, நடித்தார், சிவாஜிகணேசன். மக்களை பெற்ற மகராசி திரைப்படம் தான், வட்டார மொழி படங்களுக்கெல்லாம் முன்னோடியும், முதல் படமும் ஆகும்.

இப்படத்திற்கு பாடல் எழுதிய, கவிஞர் மருதகாசி பற்றி சொல்லியே ஆகவேண்டும். 'வாழு வாழ விடு' என்ற உயர்ந்த கொள்கை உடையவர்; மரியாதைக்காரர். அவரை, திரையுலகில் மரியாதைக்காசி என்று தான் குறிப்பிடுவர்.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும், இவரும், மிகவும் நெருங்கிய நண்பர்கள். இத்திரைப்படத்தில், கவிஞர் மருதகாசி எழுதிய, 'மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டை உழுது போடு சின்னக் கண்ணு, பசுந்தழையைப் போட்டு பாடு படு செல்லக்கண்ணு...' என்ற பாடல், மிகவும் பிரபலமானது.

அந்த பாடலின் இடையில், சிவாஜிகணேசன், கொங்கு பாஷையில் வசனம் பேசுவது மிகவும் அழகாக இருக்கும். அப்பாட்டில், விவசாய சம்பந்தமாக, என்னென்ன பொருட்கள் எங்கெங்கு கிடைக்கும் என்பதை அழகாக பட்டியலிட்டிருப்பார்.

அடிப்படையில் விவசாயியான, மருதகாசி பாடலில் வரும் ஒரு வரியில், 'பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு - நீயும் வித்துப்போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு...' என்ற வரி பாடப்படும் போது, பொள்ளாச்சி திரையரங்கில், கை தட்டல் வானை பிளக்குமாம்.

அடுத்து, சிறிய முதலீட்டில் திரைப்படம் எடுக்க முடிவு செய்தனர். எந்த கதையை திரைப்படமாக எடுக்கலாம் என்று, வி.கே.ராமசாமியும், ஏ.பி.நாகராஜனும் ஆலோசித்தனர்.

வி.கே.ராமசாமியிடம், உங்களால் ஒரு கதை நிச்சயமா எழுத முடியும் என்று, அதற்குரிய ஆதாரங்களையும் சொன்னார், ஏ.பி.என்.,

'நாடகத்துக்கு கதை விவாதம் நடக்கும்போது, உச்சக்கட்ட காட்சி சரியில்லை என்றால், அதை சுட்டிக்காட்டி மாற்றச் சொல்றீங்க. அதற்கு தகுந்த ஆலோசனையும் சொல்றீங்க. அது மட்டுமா, நேரத்துக்கு தகுந்த மாதிரி நகைச்சுவை காட்சிக்கு நல்ல வசனத்தை சேர்த்துக்கறீங்க...

'இதைவிட கதை எழுத வேற என்ன திறமை வேணும். இப்ப நான் வீட்டுக்கு போறேன். காலையில் நான் வரும்போது, நீங்க ஒரு கதை எழுதி வைச்சிருக்கணும்...' என்று, ராமசாமியிடம் சொல்லிச் சென்றார், நாகராஜன்.

ஏ.பி.என்., சொல்லி விட்டதால், அன்று இரவு முழுதும் கண் விழித்து, கதையை எழுதி முடித்தார், வி.கே.ராமசாமி.

காலையில், பார்க்க வந்தபோது, துாங்கிக் கொண்டிருந்தார், ராமசாமி. அங்கிருந்த மேஜை மேல் கதை எழுதி முடிக்கப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து, எடுத்து படித்தார், நாகராஜன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது.

வி.கே.ஆர்., எழுந்தவுடன், 'நீங்கள் எழுதிய கதை ரொம்ப நன்றாக இருக்கிறது. அந்த கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறேன்...' என்றார், நாகராஜன். அக்கதைக்கு, நல்ல இடத்து சம்பந்தம் என்று பெயர் சூட்டி, திரைக்கதை, வசனத்தையும் எழுதி முடித்தார், ஏ.பி.என்.,

அப்போது, அவர்களது அறைக்குள் வந்தார், எம்.ஆர்.ராதா.

'தம்பிகளா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து திரைப்பட நிறுவனம் ஆரம்பிச்சு, திரைப்படம் தயாரிக்கிறதுனால, உங்களை பார்த்து ஒரு சந்தர்ப்பம் கேட்கலாம்ன்னு வந்தேன்.

'நாடக குழுவை நடத்தறது ரொம்ப கஷ்டமாப் போச்சு, நடத்த முடியலை. அதனால், மறுபடியும் திரைப்படத்தில் நடிக்கிறதுன்னு முடிவை எடுத்திருக்கேன்...' என்றார்.

அதன்பின், என்ன நடந்தது?

இயக்குனராவதற்கு முன், திரைக்கதை வசனகர்த்தாவாக பணியாற்றிய திரைப்படங்களில், மறைமுகமான இயக்குனராக தான் இருந்துள்ளார், ஏ.பி.நாகராஜன்.

ஒருநாள், மக்களை பெற்ற மகராசி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படத்தின் இயக்குனர் கே.சோமு. நடிகை பானுமதி தொடர்பான காட்சியின் வெளிப்புற படப்பிடிப்பின் போது, சூரியனை மேகம் மறைக்க, போதிய வெளிச்சம் இல்லாததால், படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

அதனால், சிறிது நேரம் வெளியே சென்றிருந்தார், நாகராஜன். அவர் வருவதற்குள் சூரிய வெளிச்சம் வந்து விட்டது. இயக்குனர் கே.சோமு, ஒளிப்பதிவாளரை கூப்பிட்டு, 'படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் வாங்க...' என்று கூறியுள்ளார். ஆனால், படப்பிடிப்புக்கு தயாராகாமல் உட்கார்ந்திருந்தாராம், பானுமதி.

'சூரியன் வந்துடுச்சு அம்மா, படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் வாங்க...' என்றாராம், இயக்குனர் கே.சோமு.

'சூரியன் வந்திருச்சைய்யா. ஆனால், படத்தின் உண்மையான இயக்குனர், நாகராஜன்  வரலையே... அவரை கூட்டிக்கிட்டு வாங்க...' என்றாராம், பானுமதி.

தொடரும்

நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.

- கார்த்திகேயன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us